×
Saravana Stores

பாஜக கூட்டணிக்கு தாவிய நிலையில் நிதிஷ் அரசு மீது பிப். 12ல் நம்பிக்கை வாக்கெடுப்பு: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐதராபாத் ரிசார்ட்டில் தங்கவைப்பு

புதுடெல்லி: ஜக கூட்டணிக்கு தாவிய நிலையில் நிதிஷ் குமாரின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 2020ம் ஆண்டு பீகாரில் நடந்த சட்டபேரவைதேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வரானார். அதன் பிறகு பாஜகவுடன் அதிருப்தி ஏற்பட்டதால், 2022ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்து பீகாரில் புதிய ஆட்சியை அமைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன் மெகா கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடன் இணைந்து நிதிஷ்குமார் முதல்வராகி உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நிதிஷ் குமார் இரண்டாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றார். அவருடன் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களில் 3 பேர் பாஜகவையும், 3 பேர் ஐக்கிய ஜனதா தளத்தையும், ஒருவர் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா (மதச்சார்பின்மை) கட்சியையும் சேர்ந்தவர்கள். ஒருவர் சுயேட்சை எம்எல்ஏ பதவியேற்றுக் கொண்டனர். கூட்டணி மாறி புதிய அரசு அமைந்ததால், அந்த அரசு தானாக நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் 12ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப் பேரவைக்கு அறுதிப் பெரும்பான்மைக்கு 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணிக்கு 114 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. அதாவது காங்கிரசுக்கு 19, ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 79, இடதுசாரிகள் மற்றும் இதர கட்சிகளுக்கு 16 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 129 இடங்கள் உள்ளன. அவற்றில் பாஜகவுக்கு 78 எம்எல்ஏக்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 எம்எல்ஏக்களும், ஹெச்ஏஎம் கட்சிக்கு 4 எம்எல்ஏக்களும், சுயேட்சை ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். அதேநேரம் எந்த கூட்டணியிலும் அங்கம் வகிக்காக ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ உள்ளார்.

இதற்கிடையே எதிர்கட்சி எம்எல்ஏக்கள் குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஐதராபாத் அடுத்த இப்ராகிம்பட்டினம் ரிசார்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் அந்த ரிசார்ட்டில் வரும் 11ம் தேதி வரை தங்கியிருப்பார்கள். காங்கிரசின் 19 எம்எல்ஏக்களில் 17 பேர் ரிசார்டில் தங்கி உள்ளனர். வரும் 12ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தவுடன், சபாநாயகர் அவத் பிகாரி சவுத்ரியை (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) அந்த பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக பாஜக கூட்டணியினர் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. காரணம், தற்போதைய கூட்டணியில் சபாநாயகர் பதவியானது பாஜகவுக்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post பாஜக கூட்டணிக்கு தாவிய நிலையில் நிதிஷ் அரசு மீது பிப். 12ல் நம்பிக்கை வாக்கெடுப்பு: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐதராபாத் ரிசார்ட்டில் தங்கவைப்பு appeared first on Dinakaran.

Tags : Nitish government ,BJP ,Congress ,Hyderabad resort ,NEW DELHI ,Jaga ,Nitish Kumar ,Speaker ,2020 legislative elections ,Bihar ,United ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணிக்கு கெஜ்ரிவால் பிரசாரம்