×

“நான் பேசும் போது சம்பந்தமில்லாமல் எல்.முருகன் குறுக்கிட்டதால் உங்களுக்கு விஷயம் தெரியாது என கூறினேன்”: மக்களவை அமளி குறித்து டி.ஆர்.பாலு விளக்கம்

டெல்லி: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சரை தவறாக பேசவில்லை என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது குறித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது. தமிழ்நாட்டிற்கு வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண நிதி குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினேன். நான் கேள்வி கேட்க கூடாது என்பதற்காக பாஜகவினர் தொடர்ந்து குறுக்கிட்டார்கள். மக்களவையில் நான் பேசிய போது, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டார்.

எல்.முருகன் இடையூறு செய்ததால், சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்குமாறு நான் கூறினேன். துறைக்கு சம்பந்தமில்லாமல் எல்.முருகன் குறுக்கிட்டதால் அவரை அமரச் சொன்னேன்; உங்களுக்கு விஷயம் தெரியாது என கூறினேன். வேறு எதுவும் தவறாக கூறவில்லை. உடனே எல்.முருகனை அவமதித்துவிட்டதாக கூறி பாஜகவினர் கண்டனம் தெரிவிப்பது தவறானது. வெள்ள நிவாரணம் குறித்த கேள்விக்கு ஒன்றிய அரசு முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, தேர்தலை மனதில் வைத்தே பாஜக உறுப்பினர்கள் செயல்படுகிறார்கள். NDRF நிதி பற்றிப் பேசும்போது SDRF நிதியைப் பற்றி எல்.முருகன் பதில் சொல்கிறார். பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக கூட்டாக வெளிநடப்பு செய்தோம். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களை பேசவிடாமல் பாஜக உறுப்பினர்கள் தடுத்தனர். நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதை கண்டித்து பிப்.8ல் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

The post “நான் பேசும் போது சம்பந்தமில்லாமல் எல்.முருகன் குறுக்கிட்டதால் உங்களுக்கு விஷயம் தெரியாது என கூறினேன்”: மக்களவை அமளி குறித்து டி.ஆர்.பாலு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Murugan ,Lok Sabha ,Amali R. Baloo ,Delhi ,Dimuka ,EU ,B. D. R. Balu ,Dimuka M. B. D. R. Balu ,EU government ,Tamil Nadu ,Amali R. Balu ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...