×

தில்லைவிளாகம் ராமர் கோயிலில் குளம் சீரமைப்பு பணி மீண்டும் துவங்கப்படுமா?

*பக்தர்கள், கிராம மக்கள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற வீரகோதண்டராம சுவாமி கோயில் புகழ்பெற்ற கோயிலாகும். இது பழமையான வைணவத் கோயில். கி.பி. 1862ம் ஆண்டு வேலுத்தேவர் எனும் பக்தர் கனவில் கண்டவாறு குளம் வெட்டியபோது புதைந்திருந்த பழைமையான திருக்கோயில் தெரியவந்தது. கார்த்திகை மாதம் 12ம் தேதி பதினான்கு தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்ட திருத்தலம். பரத்வாஜ முனிவர் ராமபிரானை உபசரித்த திருத்தலம். உ.வே.சாமிநாதைய்யர் இத்திருத்தலத்தையே ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருச்சித்ரகூடம் திருத்தலமாகக் கருதினார் எனக் கூறப்படுகிறது.

மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோவில் அருகே சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட புனித ராமர் குளம் உள்ளது. இந்த குளம் காவிரியிலிருந்து வரும் நீர் கோரையாறு வழியாக வாய்க்கால் வந்து இந்த குளத்திற்கு நீர் வருகிறது. எந்தநேரமும் தண்ணீர் வற்றாமல் இருக்கும் இந்த குளம் இப்பகுதிக்கு மிகப்பெரிய நீராதாரத்தை தருவதுடன் சுற்று பகுதி மக்களுக்கு மிகவும் பயன்தரும் குளமாகவும் உள்ளது. குறிப்பாக இந்த ராமர் கோவிலுக்கு புனித குளமாக இருக்கிறது இதில் விஷேச காலங்களில் பக்தர்கள் புனித நீராடு வது வழக்கம்.

குறிப்பாக ஆடி, தை அமாவாசை காலங்களுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தவறாமல் அதிகாலை முதல் புனித நீராடி விட்டு வந்துதான் இந்த ராமரை தரிசரித்து விட்டு செல்வார்கள். இப்படி சிறப்பு மிக்க இந்த ராமர் குளம் போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் சுமார் வருடமாக மக்கள் பயன்படுத்த முடியாதளவில் செடிகொடிகள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி குளத்தின் புனித தன்மை மாறி கிடந்தது. இதனையடுத்து பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கையை ஏற்றி சுமார் 6மாதங்களுக்கு முன்பு அறநிலையத்துறை சார்பில் ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு குளத்தை சுத்தம் செய்து தூர் வாரி கரையை அணைக்கும் பணிகள் நடந்துக்கொண்டு இருந்தபோது ஏனோ காரணத்திற்காக திடீரென்று பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

ஆனால் சுமார் 6 மாதங்களை கடந்தும் பணிக்கு கொண்டு வரப்பட்ட ஜேசிபி இயந்திரம் அதே இடத்தில் நிற்கிறது. இன்னும் பணிகள் துவங்கி நடைபெறாமல் உள்ளதால் சுத்தம் செய்த பகுதிகள் கூட மீண்டும் பழையபடி மாறி குளம் வீணாகி வருகிறது இதனால் பக்தர்கள் மற்றும் மக்கள் யாரும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் தை மற்றும் ஆடி அமாவாசை காலங்களில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. அதனால் கோயில் நிர்வாகமும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு உடனே குளத்தை சீரமைக்கும் பணியை மீண்டும் துவங்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தில்லைவிளாகம் ராமர் கோயிலில் குளம் சீரமைப்பு பணி மீண்டும் துவங்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Thillavilagam Ram temple ,Muthupet ,Veerakodandarama Swami Temple ,Thillavilagam ,Vaishnava ,Veluthevar ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...