×

சின்னசேலம் நகரத்தில் சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் போக்குவரத்து நெரிசல்

* தேசிய நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

* வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

சின்னசேலம் : சின்னசேலத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் தார்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், உயிர்பலி சம்பவங்களும் ஏற்படுகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் நகரம், பேரூராட்சி, தாலுகா, ஒன்றியம் என பல்வேறு சிறப்புகளை பெற்றது. அதுமட்டுமல்லாமல் சின்னசேலம் நகரம் சென்னை-கோவை இடையில் உள்ளது. இதனால் ஆத்தூர், சேலம், ஈரோடு, கோவை, விழுப்புரம், கடலூர், திண்டிவனம், பாண்டி, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் சின்னசேலம் வந்துதான் செல்கிறது. கார், வேன், சரக்கு லாரி போன்ற வாகனங்களும், உள்ளூர் வாகனங்களும் இந்த சாலையின் வழியாகத்தான் செல்கிறது.

சின்னசேலம் அம்சாகுளம் சாலையில் இருந்து அண்ணா நகர் வரை தார் சாலை நகர பகுதியில் செல்கிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை இந்த சாலையின் இருபுறமும் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் இருந்ததுடன், அடிக்கடி விபத்துகளும், உயிர்பலி சம்பவங்களும் ஏற்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளிவந்தது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வருவாய்த்துறையினரின் துணையோடு அளந்து பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

ஆனால் சின்னசேலம் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்றிய ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் முன்பு இருந்ததைவிட தனிநபர்கள் தங்கள் கடைகளின் முன்பு மேடு பரப்பி கொட்டகை அமைத்துள்ளனர். மேலும் நகாய் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு முன்பாவது கடைகாரர்கள் பயந்து இருந்தனர். ஆனால் அதன்பிறகு பயம் தெளிந்து சகட்டுமேனிக்கு ஆக்கிரமித்துள்ளனர். இதைப்போல இருபக்கமும் ஆக்கிரமித்துள்ளதை சமூக ஆர்வலர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் சொல்லியும் அவர்கள் ஆக்கிரமிப்பை தடுக்கவோ, அகற்றவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களாக பொங்கல், தீபாவளி பண்டிகையின் போது சின்னசேலம் நகர மெயின் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்துகளுடன், உயிர்பலி சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும் சாலையின் இருபுறமும் மினிலாரி போன்ற தக்காளி, காய்கறி விற்கும் வண்டிகளை நிறுத்தி கொள்கின்றனர். இதனால் ஒதுங்கவே இடம் இல்லாத நிலை உள்ளது.

அதைப்போல கடைகளுக்கு செல்லும் போது கடை முன்பு மேடு பரப்பி உள்ளதால், மேலே வாகனங்களை ஏற்றி நிறுத்த முடியாததால் சாலை ஓரத்திலேயே வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனாலும் பஸ் வரும் போது ஒதுங்க இடம் இல்லாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சின்னசேலம் மெயின் ரோட்டில் அம்சாகுளம்-அண்ணா நகர் சாலையில் விபத்துகளை தடுக்க வேண்டும் என்றால் முதலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற வேண்டும்.

சாலையோரம் கொட்டி வைத்துள்ள விறகு போன்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். இதையெல்லாம் நகாய் நிர்வாகம் செய்யாது. ஆகையால் மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சித்துறையும், வருவாய்த்துறையும், காவல்துறையும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நகாய் அதிகாரிகள் அலட்சியத்தால் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

சின்னசேலம் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் இருப்பதை தினகரன் நாளிதழ் சுட்டிக்காட்டிய நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் நகாய் அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவிட்டார். அப்போது நகாய் அதிகாரிகள் சுமார் ஒரு வார காலமாக காவல்துறை, வருவாய்த்துறை, பேரூராட்சித்துறை அலுவலர்களை கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு சுமார் 3 லட்சம் செலவாகி இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் 100 பேரின் உடல் உழைப்பும் இருந்தது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றிய ஒரு மாதத்துக்கு பிறகு பெரும்பாலோனோர் தங்கள் கடை முன்பு கொட்டகை போட்டு ஆக்கிரமிப்பு செய்தனர். அப்போது சமூக ஆர்வலர்கள் நகாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் தடுக்கவோ, அகற்றவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகாய் அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது முன்பைவிட அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்ற வேண்டும்

சின்னசேலத்தில் அம்சாகுளம் முதல் அண்ணா நகர் பகுதி வரை உள்ள மெயின் ரோடு தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் உள்ளது. அதாவது நகாய் அமைப்பினரிடம் உள்ளது. தற்போது சின்னசேலத்தில் புறவழிச்சாலை உள்ளதால் இந்த சாலையை அவர்கள் கண்டுகொள்வது கிடையாது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை தமிழக நெடுஞ்சாலையாக மாற்றினால், தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கி சாலையின் இரண்டு பக்கமும் சாக்கடை கால்வாய் அமைக்கலாம்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தலாம். அவ்வாறு அமைத்தால் மழை காலத்தில் சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடாத நிலை இருக்கும். ஆகையால் இந்த சாலையை தமிழக நெடுஞ்சாலையாக மாற்றிட அதற்கான ஆயத்த பணிகள் நடப்பதாக அதிகாரிகள் கூறினாலும், அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post சின்னசேலம் நகரத்தில் சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,National Highways Department ,Kallakurichi district ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...