×

மாவட்ட கலெக்டர் ஆபீசில் பரபரப்பு தவறாக பட்டா வழங்கியதாக புகார்; நடவடிக்கை கோரி பொதுமக்கள் மனு

ஈரோடு : தவறாக பட்டா வழங்கியதாக பரபரப்பு புகார் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.கூட்டத்தில், ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகா எலத்தூர், பழைய அரிஜன காலனியை சேர்ந்தவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எலத்தூர், பழைய அரிஜன காலனியில் வசித்து வருகிறோம். எங்களது முன்னோர்கள் கடந்த 80 ஆண்டுகளாக இங்கு வசித்துள்ளனர். 3-வது தலைமுறையாக நாங்கள் வசிக்கிறோம். இந்நிலையில் கடந்த 2ம் தேதி சிலர் எங்கள் பகுதிக்குள் வந்து ஜே.சி.பி. இயந்திரம் மூலமாக நாங்கள் வசிக்கும் இடத்தை சுத்தம் செய்து, ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். சில சுவர்களையும், இடித்து சேதப்படுத்திவிட்டனர். இதுகுறித்து, கடத்தூர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளோம்.

இருப்பினும், ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவர்கள், தங்களிடம் ஆவணங்கள் இருப்பதாக கூறி உள்ளனர். அந்த இடத்துக்கு பட்டா மாறுதல் உத்தரவை மண்டல துணை தாசில்தார் வழங்கி உள்ளதாக கூறுகின்றனர். நாங்கள் இருக்கும் இடத்துக்கு முறையாக சொத்து வரி, மின் கட்டணம் செலுத்துகிறோம். பிற ஆவணங்களும் உள்ளன. எனவே, தவறாக பட்டா வழங்கியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மிஷன் அமைப்பு மனு: சிலோன் அன்ட் இந்தியா ஜெனரல் மிஷன் எனும் கிறிஸ்தவ அமைப்பினர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிலோன் அன்ட் இந்தியா ஜெனரல் மிஷனுக்கு சொந்தமாக ஈரோடு மாவட்டம், கோபி, மொடச்சூர் சாலையில் போர்டிங் பள்ளி மற்றும் பங்களா ஆகியவை உள்ளன. பள்ளி செயல்படாமல் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்த மிஷனுடைய செயல்பாட்டில் இல்லாத ஒரு தரப்பினர் பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டனர். தற்போது பங்களாவையும் இடித்து விட்டனர். இதுகுறித்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மிஷனரி சொத்துக்களை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் தாமதம்:

பவானி தாலுகா வைரமங்கலம், குட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபல் சுன்கராவிடம் அளித்துள்ள மனுவில், எங்கள் ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தில் ஆண்கல், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறோம். இதில், ஒரு நபருக்கு ரூ. 280 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கம்பிவேலி போட்டு வழித்தடம் மறிப்பு:

அந்தியூர், தவிட்டுப்பாளையம், விவேகானந்தர் வீதியை சேர்ந்த தீபா என்பவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனது தந்தை மொழிப்போர் தியாகி. அதற்கான அத்தனை கவுரவத்தையும் அரசு எனது தாயாருக்கு வழங்கி வருகிறது. நாங்கள் எங்கள் வீட்டுக்குச் செல்வதற்காக பரம்பரையாக பயன்படுத்தி வந்த வழித்தடத்தை அப்பகுதியினர் சிலர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஒருவரின் உதவியுடன், கம்பி வேலி போட்டு அடைத்துவிட்டனர்.

இதுகுறித்து, கடந்த 20-12-2023 அன்று மனு அளித்திருந்தோம். அதன்பேரில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தும், பேரூராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், எங்கள் வீட்டுக்கு செல்வதற்கே முடியாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே, கம்பி வேலியை அகற்றி வழித்தடம் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.415 மனுக்கள் குவிந்தன:

முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவித் தொகைகள் கேட்டும், வீட்டுமனை பட்டா, கல்விக்கடன், அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 415 மனுக்கள் பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவு, அமைச்சர்களின் முகாம் மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் குமரேஷ் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட கலெக்டர் ஆபீசில் பரபரப்பு தவறாக பட்டா வழங்கியதாக புகார்; நடவடிக்கை கோரி பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : District Collector's ,Patta ,Erode ,Erode Collector ,collector ,Dinakaran ,
× RELATED இன்றுடன் பிரசாரம் முடியும் நிலையில்...