×

செடி கொடிகள் வளர்ந்து புதராக மாறிய வீராணம் ஏரியை முழுவதுமாக தூர்வார வேண்டும்

*நஞ்சு உற்பத்தியாவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : செடி கொடிகள் வளர்ந்து முட்புதராக மாறிய வீராணம் ஏரியை முழுவதுமாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் தற்போது தண்ணீரில் நஞ்சுகள் உற்பத்தியாகி வருவதாக ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. இதனைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையுமுற்ற இப்பகுதி விவசாயிகளும், நூற்றுக்கணக்கான கிராம மக்களும் வாழ்வாதாரமாக உள்ள ஏரியை பறிகொடுத்து வருகிறோமே என்று வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

சுமார் 17 கிலோ மீட்டர் நீளமும், 5 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது இந்த வீராணம் ஏரி. ஏரியின் மொத்த நீர் தேக்கும் அளவு 47.50 அடி. ஏரிக்கு நீர்வரத்து கீழ அணையில் இருந்து வடவாறு வழியாகவும், பல்வேறு ஓடைகள் வழியாகவும் இருந்து வருகிறது.மழை, வெள்ளக்காலங்களில் உபரி நீராகவே பல லட்சம் கன அடி தண்ணீர் வீணாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

பல சிறப்புகளைக் கொண்ட இந்த ஏரி இப்போது நமது கையை விட்டு நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம் என விவசாயிகளும், கிராம மக்களும் தெரிவித்து வருகின்றனர். ஏரிக்குள் மலைபோல மண் மேடுகள் குவிந்துள்ளன. அது மட்டுமல்லாமல் ஏரியின் திருச்சின்னபுரம் பகுதியில் இருந்து லால்பேட்டை வரை சுமார் 200 ஏக்கருக்கு மேல் ஏரியே அடையாளம் தெரியாத அளவில் காட்டாமணக்கு செடிகளும், முட்புதர்களும் சூழ்ந்துள்ளன.

இதுபோலவே ஏரியின் மேற்கு பகுதி கரை ஓரங்களிலும் பல்வேறு மரக்காடுகள் வளர்ந்துள்ளன. இந்த ஏரியை நம்பி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மட்டுமல்லாது 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு உதவி வருகிறது. இவ்வாறு சிறப்பு மிக்க இந்த ஏரியை போதிய அக்கறை இல்லாத காரணத்தினால் தற்போது ஏரிக்குள் பல்வேறு செடிகள் மற்றும் பாசிகள் உள்ளிட்டவை காரணமாக நஞ்சுகள் உற்பத்தியாகி வருகிறது என ஆய்வுகள் தெரிவித்து அதிர வைத்துள்ளது.

எனவே ஏரியை காக்க உடனடியாக எந்தவித காலதாமதமும் செய்யாமல் முழுமையாக தூர்வாரி பாசிகள், காட்டாமணக்கு செடிகள், முட்புதர்களை அகற்றி தர வேண்டும். மேலும் வெள்ள காலங்களில் வெளியேற்றப்படும் பல லட்சம் கன அடி உபரி நீரை ஏரிக்குள்ளேயே தேக்குவதற்கு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்களும், விவசாயிகளும் வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செடி கொடிகள் வளர்ந்து புதராக மாறிய வீராணம் ஏரியை முழுவதுமாக தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Veeranam Lake ,Chettiathoppu ,Cuddalore district ,
× RELATED தடையை மீறி போராட்டம் அறிவிப்பு; நாம்...