×

வரத்து குறைவால் விலை கிடுகிடு கொடைக்கானல் பூண்டு கிலோ ரூ.650க்கு விற்பனை

*10 நாட்களில் விலை குறைய வாய்ப்பு

திண்டுக்கல் : வரத்து குறைவால் திண்டுக்கல் மார்க்கெட்டில் கொடைக்கானல் மலைப்பூண்டு கிலோ ரூ.650க்கு விற்பனையானது.வீடுகளில் உணவு சமைப்பதற்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று வெள்ளைப்பூண்டு. தமிழகத்திற்கு தேவையான பூண்டு இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் கொடைக்கானலில் இருந்து தான் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது இமாச்சல பிரதேசத்தில் வெள்ளப்பூண்டு சீசன் ஆகும். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு பெய்த கனமழை காரணமாக பூண்டு விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து வரத்து குறைந்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை ஏற்றம் கண்டுள்ளது. திண்டுக்கல் மார்க்கெட்டில் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்பட்ட பூண்டு, தற்போது ரூ.300 முதல் ரூ.460 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மருத்துவ குணம் கொண்ட கொடைக்கானல் மலைப்பூண்டு, காலநிலை மாற்றம் மற்றும் அதிக மழை காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால் விலை ஏற்றம் கண்டுள்ளது. வழக்கமாக கிலோ ரூ.200 முதல் ரூ.380 வரை அதன் தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விளைச்சல் குறைவு காரணமாக ரூ.260 முதல் ரூ.650 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும், தமிழகத்திற்கு தற்போது மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் இன்னும் 10 நாட்களில் பூண்டு விலை வெகுவாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போதைய விலை ஏற்றம் தற்காலிகமானது. வரத்து அதிகரித்தால் விலை குறையும் என்றனர். விலை உயர்வால் வழக்கமாக ஒரு கிலோ வாங்கிச் செல்பவர்கள், தற்போது அரை கிலோ, கால் கிலோ வாங்குவதாகவும், இருப்பினும் 10 நாட்களில் விலை கட்டுக்குள் வந்து விடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post வரத்து குறைவால் விலை கிடுகிடு கொடைக்கானல் பூண்டு கிலோ ரூ.650க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Tamil Nadu ,Himachal Pradesh, Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில்...