×

கமுதி மின்வாரிய அலுவலகத்தில் விஷபூச்சிகள் தொல்லை அதிகரிப்பு

 

கமுதி, பிப்.6: கமுதி அருப்புக்கோட்டை சாலையில், அரசு மருத்துவமனை அருகே மின்வாரிய அலுவலகம் உள்ளது. கடந்த 30 வருடங்களுக்கு மேல் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த அலுவலகம், தற்போது மிகவும் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் மோசமாக உள்ளது. மேலும் இக்கட்டிடத்தை சுற்றிலும் அடர்ந்த கருவேல மரங்கள் வளர்ந்து பொதுமக்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களை அச்சுறுத்தி வருகிறது. இப்பகுதியில் ஏராளமான பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் காணப்படுகின்றன. இவைகள் அவ்வப்போது அலுவலகத்திற்குள் வந்து பணியாளர்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் சாலையில் இருந்து இக்கட்டிடம் மிகவும் தாழ்வான பகுதியில் உள்ளதால், மழைநீர் தேங்கி சாக்கடை குளம் போல் காட்சியளிக்கிறது.

இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, மின்வாரிய அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்திக் கொண்டே வருகின்றனர். மேலும் இப் பகுதியில் உற்பத்தியாகும் கொசுக்களால் கொடிய நோய்கள் மற்றும் விஷ காய்ச்சலின் பிறப்பிடமாக உள்ளது. இப்பகுதியின் அருகே தான் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். சுகாதாரக்கேடு நிறைந்த பகுதியால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் ஏராளமானோர் பாதிப்படைகின்றனர். எனவே கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, மின்வாரிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கமுதி மின்வாரிய அலுவலகத்தில் விஷபூச்சிகள் தொல்லை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kamudi Power Board ,Kamudi ,Aruppukkottai Road, Kamudi ,
× RELATED கமுதி அருகே பழைய கட்டிடத்தில் இயங்கும் மின்வாரிய அலுவலகம்