×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடனமாடி வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மன்னிப்பு கோரினர்

சென்னை, பிப்.6: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், தடையை மீறி சினிமா பாடலுக்கு நடனமாடி, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 2 இளைஞர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம். இந்த கோயில் வளாகத்தில் யாரும் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என்று அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதையும் மீறி சிலர் கோயில் வளாகத்தில் போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த கோயிலில் 2 வாலிபர்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதை பார்த்து பக்தர்கள் கொந்தளித்தனர். கோயில் வளாகத்துக்குள் சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதா, என்று கண்டனம் தெரிவித்ததோடு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவந்தனர்.

இதையடுத்து, மேற்படி நபர்களால் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவையும், அவர்களது சமூக வலைதளத்தையும் முடக்கம் செய்து, இந்த வீடியோவில் நடனமாடி பதிவிட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என சைபர் கிரைம் காவல் பிரிவு ஆய்வாளரிடம் கோயில் நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த 2 இளைஞர்கள் மன்னிப்பு கோரி டிவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், ‘‘கடந்த டிசம்பர் மாதம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு நாங்கள் போயிருந்தோம். அப்போது, அங்கு ஒரு டான்ஸ் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

இப்போது, அந்த வீடியோவை பார்த்துட்டு நிறைய கண்டனங்கள் வர ஆரம்பித்துவிட்டது. இந்த வீடியோ தப்பா போகுதே என்று நினைத்து, அந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டோம். இனிமேல் அதுபோன்ற வீடியோக்களை நாங்கள் பதிவிட மாட்டோம். அதுவும் கோயிலில் டான்ஸ் வீடியோ, அந்த மாதிரி பாடல்களுக்கு செய்ய மாட்டோம். முழுக்க முழுக்க இது எங்களுடைய தவறுதான். இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களால் கோயில் நிர்வாகத்துக்கும், அறநிலையத்துறைக்கும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்களிடம் எங்களுடைய மன்னிப்பை கேட்டுக் கொள்கிறோம். எங்கள் டான்ஸ் வீடியோ பார்த்துவிட்டு, யாராவது மனம் புண்பட்டிருந்தீர்களானால், அவர்களிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். மன்னிக்கவும்,’’ என பேசி உள்ளனர்.

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடனமாடி வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மன்னிப்பு கோரினர் appeared first on Dinakaran.

Tags : Kapaleeswarar temple ,Mylapore ,Chennai ,Mylapore Kapaleeswarar Temple… ,Mylapore Kapaleeswarar Temple ,
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது