×

எடப்பாடி இல்லாத அதிமுக உருவாகும் இரட்டை இலை சின்னத்தில்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

மதுரை: அதிமுக ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை காமராஜர் சாலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது: எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருந்தபோதே ஒரு தேர்தலில் தோற்றால் மற்றொரு தேர்தலில் வெற்றி பெறுவோம். ஆனால், எடப்பாடி பதவிக்கு வந்த பின், 8 தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நம்முடன் கூட்டணி வைத்து போட்டியிட சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க போராடி வருகிறோம். நீதிமன்ற தீர்ப்புகள் தற்காலிகமானது. நிரந்தர தீர்ப்புகள் வரவில்லை. நிலைமையை புரிந்து கொண்டு பழனிசாமி அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி படுதோல்வி அடையப்போவது உறுதி. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஏற்கனவே அங்கம் வகித்து வருகிறோம். அனைத்து நிலைகளிலும் பாஜவுக்கு ஆதரவு அளிப்போம். இரட்டை இலை சின்னம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டது. அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதால், அந்த உரிமையின் அடிப்படையில் இரட்டை இலை மீது உரிமை கோருவோம். எங்களுக்கு தான் இரட்டை இலை கிடைக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில், தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இரட்டை இலையில் தான் போட்டியிடுவோம். அதிமுகவில் இதுவரை பிரிந்திருந்த சக்திகள் ஒன்று சேர்ந்து, எனக்கு பவர் கொடுத்து விட்டார்கள்’’ என்று தெரிவித்தார்.

* ‘ஜெயக்குமார் நடமாட முடியாது’
‘ஜெயக்குமார் நாவை அடக்கி பேச வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழகத்துக்குள் எங்கும் நடமாட முடியாது’ என்று ஓபிஎஸ் எச்சரித்து உள்ளார்.

* சின்னம் முடக்க வாய்ப்பு
புதுக்கோட்டையில் ஓபிஎஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். சின்னம் முடக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். வரும் 24ம்தேதி சசிகலா கொடுக்கும் விருந்திற்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் கட்டாயம் கலந்து கொள்வேன். இஸ்லாமிய சிறைவாசிகளை தற்போது விடுவித்துள்ளது என்ற தகவல் வரவேற்கத்தக்கது. அதிமுக கரைவேட்டி, கொடி பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் அதிக அளவில் உள்ளது. பாஜவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியவுடன் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

* ‘ஊர்ந்து சென்று முதல்வரானவரை மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பர்’
ஓபிஎஸ் கூறுகையில், ‘‘எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலா. ஊர்ந்து சென்று முதல்வரான அவரை, தேர்தலில் இருந்து, மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராகவும், என்னை ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடியை இணை ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்து இயற்றிய தீர்மானம், 2026ம் ஆண்டு வரை செல்லக்கூடியது. ஜெயலலிதா சொல்லும் சொல்லை மீறாத தொண்டனாக அதிமுகவில் இருந்துள்ளேன்’’ என்றார்.

The post எடப்பாடி இல்லாத அதிமுக உருவாகும் இரட்டை இலை சின்னத்தில்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,O. Panneerselvam ,Madurai ,Madurai District Volunteers' Rights Rescue Committee ,Madurai Kamarajar Road ,Chief Minister ,MGR ,Jayalalitha ,
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...