×

வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் விவசாயிகள், சுய உதவி குழுவுக்கு ரூ.2 கோடி கடன் உதவி திட்டம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் விவசாயிகள், சுய உதவி குழுக்கள், பெண் தொழில் முனைவோர் ரூ.2 கோடி வரை கடன் பெறலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பயிர் அறுவடைக்கு பின்னர், விளைபொருட்களை காய வைத்தல், சுத்தம் செய்தல், தரம் பிரித்தல், மதிப்பு கூட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான வேளாண் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடன் உதவி திட்டம் உருவாக்கப்பட்டது. 2020-21ல் துவங்கப்பட்ட இத்திட்டம் 2032-33 வரை செயல்பாட்டில் இருக்கும். அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, 7 ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு 3% வட்டி குறைப்பு வழங்கப்படுகின்றது. கடன் தவணை தொகையை திருப்பி செலுத்த விலக்களிக்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டுகள் உட்பட அதிகபட்சம் 7 ஆண்டுகளுக்குள் கடன் திருப்பி செலுத்தப்பட வேண்டும். ரூ.2 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.

விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், விவசாய குழுக்கள், பெண் தொழில் முனைவோர்கள், விருப்பமுள்ள கிராமப்புற இளைஞர்கள், வேளாண் தொழில் முனைவோர்கள், புதிதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்புகள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பல்வகை கூட்டுறவு சங்கங்கள், மத்திய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு, தனியார் பங்கேற்புடன் கூடிய அமைப்புகள், வேளாண் விளைபொருட்கள் விற்பனை குழுக்கள், தேசிய மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

மின்னணு சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், பழுக்க வைக்கும் அறைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டம் குறித்த விரிவான தகவல்களை அறியவும், விண்ணப்பிக்கவும் www.agriinfra.dac.gov.in இணையதளத்தையும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்) மற்றும் மாவட்ட தொழில் மையங்களையும் தொடர்பு கொள்ளலாம்.

The post வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் விவசாயிகள், சுய உதவி குழுவுக்கு ரூ.2 கோடி கடன் உதவி திட்டம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Chennai ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...