×

அமைச்சர்கள் மீதான வழக்குகளை யார் விசாரிப்பது? ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் பொறுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: முன்னாள், இன்னாள் அமைச்சர்களின் வழக்குகளை யார் விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் ஒப்படைப்பதாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் முன்னாள், இன்னாள் அமைச்சர்களின் முடித்து வைக்கப்பட்ட வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து பட்டியலிட்டு விசாரித்து வருகிறார். குறிப்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் தொடர்பான சொத்து குவிப்பு வழக்குகளை கீழமை நீதிமன்றங்கள் விசாரித்ததோடு, அவர்களை விடுதலையும் செய்துள்ளது. ஆனால் கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை எனக்கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இதுபோன்ற வழக்குகளை விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் நடவடிக்கைக்கு தடைக்கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அவரது மனைவி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதலுடன் தான் விசாரணை நடத்தப்படுகிறதா என்று அறிக்கை தாக்கல் செய்ய பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பில் ஒரு அறிக்கை இரு தினங்களுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிப்பது குறித்து ஒப்புதல் கேட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அனுப்பியிருந்த கடிதத்தை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பார்ப்பதற்கு முன்னதாகவே அவர் விசாரணையை துவங்கி விட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் ஹெச்.ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் என்.ஆர்.இளங்கோ, ‘‘அமைச்சர்கள் மீதான முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்க்கு அதிகாரம் இல்லை. குறிப்பாக இந்த விவகாரத்தில் ஒப்புதல் கடிதத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பார்ப்பதற்கு முன்பாகவே தனிநீதிபதி தனது விசாரணையை தொடங்கியுள்ளார். ஏன் அதுவரையில் அவரால் காத்திருக்க முடியவில்லை. குறிப்பாக ஒரு வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு என்று ஒரு வரையறை உள்ளது. ஆனால் இந்த வழக்குகளில் அவை அனைத்தும் மீறப்பட்டுள்ளது.

மேலும் வரைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை என்றால், குறிப்பிட்ட அந்த நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவுகளும் செல்லாத ஒன்றானதாகும் என்ற விதிமுறைகள் உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தனிநீதிபதி ஏன் இத்தனை அவரசம் காட்டுகிறார் என்பது புரியவில்லை என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிக்கும் நடவடிக்கைக்கு தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். குறிப்பாக மாவட்ட முதன்மை நீதிபதி விசாரித்த வழக்குகளை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, வழக்கில் அம்சங்களை பார்த்து தகுதியின் அடிப்படையில் அதனை தன் அமர்வு முன்பாக விசாரிக்கலாம் அல்லது வேறு அமர்வு முன்பாகவும் மாற்றி அமைக்கலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றசாட்டு வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள தனி நீதிபதி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் ரோஸ்டர் நீதிபதியாக தான் இருக்கிறார். அப்படி இருக்கும்போது இந்த வழக்குகளை அவர் விசாரணைக்கு எடுத்ததில் என்ன தவறு உள்ளது என்பது புரியவில்லை. மேலும் ஒரு தனி நீதிபதி வழக்கின் விசாரணைகளை தனது வரம்புகளுக்கு உட்பட்டு விசாரணைக்கு எடுக்கிறார் என்றால் அதற்கு தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது கட்டாயமா என்றால் அது கேள்வியாக தான் உள்ளது.

இருப்பினும் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, அனுமதி கடிதத்தை பார்ப்பதற்கு முன்பாகவே தனி நீதிபதி தனது விசாரணையை தொடங்கி விட்டார் என்ற மனுதாரர்கள் முன்வைக்கும் வாதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனவே முன்னாள், இன்னாள் அமைச்சர் மீதான வழக்குகளை நாங்கள் மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கிறோம். இதையடுத்து தகுதியின் அடிப்படையில் வழக்கை அவரே வேண்டுமானாலும் விசாரிக்கலாம், இல்லை வேறு நீதிபதி அமர்வுக்கோ மாற்றலாம், அல்லது தற்போது விசாரிக்கும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிக்கவும் அனுமதி வழங்கலாம்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட அனைத்து பொறுப்புகளையும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே எடுப்பார். இருப்பினும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிடம் இருக்கும் வழக்குகளை நாங்கள் நேரடியாக எந்த அமர்வுக்கும் மாற்றுவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி கொள்கிறோம். மேலும் இந்த உத்தரவானது எதிர்காலத்தில் இந்த வழக்கு எந்த அமர்வில் விசாரிக்கப்பட்டாலும் அதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு என்பது இதே கோரிக்கைகள் கொண்ட அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தக் கூடியதாகும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை முடித்து வைத்தனர்.

* எம்பி., எம்எல்ஏ.,க்கள் மீதான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
சென்னை: எம்.பி., எம்.ஏல்.ஏ.,க்கள் மீது தானாக முன்வந்து வழக்கு தொடர தலைமை நீதிபதியின் முன்அனுமதி வேண்டுமா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்ததால் உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை தள்ளிவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளின் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்குகளின் மீது விரிவான வாதங்களை நடத்த தேதி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. வழக்கு மதியம் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுப்பதற்கு தலைமை நீதிபதியின் அனுமதி தேவையா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதி தொடர்பாக தலைமை நீதிபதி முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவை பார்த்த பிறகு முடிவு செய்யலாம் என்று தெரிவித்து விசாரணையை புதன் கிழமைக்கு (நாளை) தள்ளி வைத்தார்.

* சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் தருவதற்கு முன்பாகவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.
* தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு என்று ஒரு வரையறை உள்ளது. ஆனால் இந்த வழக்குகளில் அவை அனைத்தும் மீறப்பட்டுள்ளது.

The post அமைச்சர்கள் மீதான வழக்குகளை யார் விசாரிப்பது? ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் பொறுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Chief Justice ,Chennai High Court ,Tamil Nadu ,Judge ,Anand ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்