×

50 மூட்டை பூண்டு விற்பனை செய்து ரூ.16 லட்சம் லாபம் ஈட்டிய விவசாயி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் 50 மூட்டை பூண்டு விற்பனை செய்ததின் மூலம் ரூ.16 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார். சமையலுக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் வெங்காயம் மற்றும் பூண்டு இன்றியமையாத ஒன்றாகவுள்ளது. நாட்டில் அடிக்கடி வெங்காயம் விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி கொடுத்தாலும், வாங்கி பயன்படுத்தும் மக்களின் கண்ணில் கண்ணீரை வரவழைத்து வரும். ஒரு கால கட்டத்தில் வெங்காய விலை உயர்வு ஒன்றிய அரசின் ஆட்சி நிர்வாகத்தை ஆட்டம் காண செய்த சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில் வெங்காயம் பிரச்னை முடிந்துள்ள நிலையில், தற்போது பூண்டு விலை கடந்த ஒரு மாதமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.300ஆக இருந்தது. தற்போது கிலோ ரூ.400 முதல் 500 வரை உயர்ந்துள்ளது. இதனால் பெண்கள் சமையலுக்கு பூண்டு பயன்படுத்துவதை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்ய கிலோ கணக்கில் பூண்டு தேவைப்படுவது. இதனால் பூண்டு விவசாயிகள் காட்டில் நல்ல பண மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம், சிஞ்ஜோளி தாலுகாவை சேர்ந்த விவசாயி ஹொன்னப்பாகவுட சரணப்பாகவுடா தாரநாள், தனது நிலத்தில் பயிர் செய்திருந்த பூண்டுகளை 50 சாக்கு மூட்டைகளில் வைத்து வாகனம் மூலம் தாவணகெரே மாநகரில் உள்ள பூண்டு மார்க்கெட் கொண்டு வந்து, ஒரு குவிண்டால் ரூ.32,500 என்ற விலையில் விற்பனை செய்தார். அதன் மூலம் ரூ.16 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார். இது குறித்து ஹொன்னப்பாகவுடா கூறும்போது, கடந்த பத்தாண்டுக்கு முன் குவிண்டால் பூண்டு ரூ.15 முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் அதுபோன்ற விலை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்காமல் நஷ்டம் அனுபவித்த வரலாறும் உள்ளது. தற்போது மீண்டும் பொற்காலம் பிறந்துள்ளது. 50 சாக்கு மூட்டைகளில் கொண்டுவந்த பூண்டுகளை குவிண்டால் ரூ.27 முதல் 32 ஆயிரம் வரை விற்பனை செய்தேன். அதன் மூலம் ரூ.16 லட்சம் கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

The post 50 மூட்டை பூண்டு விற்பனை செய்து ரூ.16 லட்சம் லாபம் ஈட்டிய விவசாயி appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Karnataka ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...