×

ரஞ்சி கோப்பை சி பிரிவு; கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு முன்னிலை

கோவா: ரஞ்சி கோப்பை தொடரின் எலைட் சி பிரிவு 5வது சுற்று ஆட்டத்தில் கோவா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழ்நாடு, புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. போர்வோரிமில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த கோவா முதல் இன்னிங்சில் 241 ரன் எடுத்தது (சுயாஷ் 104, சித்தார்த் 69). தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 4, அஜித்ராம் 3 விக்கெட் வீழ்த்தினர். தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 273 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நாராயண் ஜெகதீசன் 75, விஜய் சங்கர் 54, பிரதோஷ் ரஞ்சன் பால் 71ரன் எடுத்தனர். கோவாவின் மோகித் ரெட்கர் 5, தர்ஷன் மிஷல் 4 விக்கெட் அள்ளினர். 32 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய கோவா 168 ரன்னிலேயே சுருண்டது. சுயாஷ் 79, சித்தார்த் 32 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். தமிழ்நாடு பந்துவீச்சில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4, பிரதோஷ் 2 விக்கெட் சாய்த்தனர்.

137 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு 3வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் கடைசி நாளான நேற்று உணவு இடைவேளைக்கு முன்பாகவே 49.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து தமிழ்நாடு இலக்கை கடந்தது. சுரேஷ் லோகேஷ்வர் 52, பிரதோஷ் ரஞ்சன் பால் 65 ரன் விளாசினர். இந்திரஜித் 7, விஜய் சங்கர் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோவாவின் தர்ஷன் 2 விக்கெட் எடுத்தார். 6 புள்ளிகளை தட்டிச் சென்ற தமிழ்நாடு சி பிரிவில் 21 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது (5 போட்டி, 3 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி). கர்நாடகா (21), திரிபுரா (14) அடுத்த இடங்களில் உள்ளன. எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் தமிழ்நாடு அணி வலுவான கர்நாடகா, பஞ்சாப் அணிகளை எதிர்கொள்ள உள்ளது.

 

The post ரஞ்சி கோப்பை சி பிரிவு; கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Ranji Trophy C Division ,Tamil Nadu ,Goa ,Elite C Division ,Ranji Trophy ,Porvorim ,Ranji Cup C Division ,Dinakaran ,
× RELATED விவசாய நிலங்களையும், இந்து...