×

செங்கல்பட்டு அம்மன் கோயில் பகுதியில் பிளாஸ்டிக் துகள்களால் பரவும் சுகாதார சீர்கேடு: மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பச்சையம்மன் கோயில் பகுதியில் இயங்கும் குப்பை கிடங்குகள் நிரம்பி, சாலையிலேயே ஏராளமான குப்பைகள் சிதறி கிடக்கின்றன. மேலும், அங்குள்ள வெள்ளை கோணி குடோனில் இருந்து துகள்கள் காற்றில் பறந்து வருவதால், அவ்வழியே சென்று வரும் மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு சுகாதார சீர்கேடுகள் நிலவி வருகின்றன. இவற்றை முறையாக அகற்றி, தூய்மை பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் செங்கல்பட்டு அருகே பச்சையம்மன் கோயில் பகுதியில் உள்ள நகராட்சி குடோனில் கொட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தற்போது நகராட்சிக்கு சொந்தமான குடோனில் மலைபோல் குப்பைகள் நிரம்பி, அங்குள்ள சாலை முழுவதும் குப்பைக் கழிவுகள் சிதறி கிடக்கின்றன.

மேலும், அங்கு 200 சதுர அடி இடத்தில் ஒரு தனியார் வெள்ளை பிளாஸ்டிக் கோணி குடோனும் இயங்கி வருகிறது. இக்குடோனில் சேகரிக்கப்படும் வெள்ளை கோணிகளில் இருந்து ஏராளமான பிளாஸ்டிக் துகள்கள் காற்றின் மூலம் வேகமாக சுற்றுப்புறப் பகுதிகளில் பரவி வருகின்றன. மேலும், அந்த தனியார் குடோன் மற்றும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து டன்கணக்கில் கொட்டி வைக்கப்பட்டு உள்ள சேதமான பிளாஸ்டிக் வெள்ளை கோணிகளால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இக்கோணிகளில் இருந்து மைதா மாவு போன்ற வெள்ளை துகள்கள் காற்றில் கலந்து வருவதால், அவ்வழியே சென்று வரும் மக்களுக்கு கடும் மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு சுகாதார சீர்கேடுகள் நிலவி வருகின்றன.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி மக்கள் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, செங்கல்பட்டு பச்சையம்மன் கோயில் பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைக் கழிவுகள் மற்றும் சேதமான பிளாஸ்டிக் வெள்ளை கோணி கழிவு குடோனை உடனடியாக அகற்றி, அங்கு தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு மக்களை பல்வேறு நோய்தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்க மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post செங்கல்பட்டு அம்மன் கோயில் பகுதியில் பிளாஸ்டிக் துகள்களால் பரவும் சுகாதார சீர்கேடு: மூச்சுத்திணறலால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Amman Temple ,Chengalpattu ,Chengalpattu Pachaiyamman temple ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...