×

எளிதாக ரசிக்கப்படும் இசை… என்றும் நீங்காமல் இருக்கும்!

நன்றி குங்குமம் தோழி

வீணையில் திரைப்பட பாடல்களை வாசித்து அசத்தி வருகிறார் கரூரை சேர்ந்த ஸ்ரீநிதி. பாடலின் பல்லவி, மெட்டு என எல்லாவற்றையும் மிகவும் நுணுக்கமாக வாசிப்பதுதான் இவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. தொடர்ந்து வீணையில் பல புதுப்பட பாடல்களையும் வாசித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வைரலாகி வருகிறார்.  ‘‘சொந்த ஊரு கரூர். படிச்சதெல்லாமே அங்கதான். சின்ன வயசில் இருந்தே நான் இசை பயின்று வருகிறேன்.

பியானோ, கிட்டார், வீணை, பரத நாட்டியம் இவையெல்லாமே நான் கற்றுக் கொண்டேன். கற்றுக் கொண்டதோடு மட்டுமில்லாமல் நான் பள்ளி காலங்களிலேயே பல போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். தொடர்ந்து பல இசைக் கருவிகளை இசைக்க கற்றுக் கொண்டாலும் எனக்கு வீணை மீது ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் வீணை ஒரு நரம்பு வகையிலான இசைக்கருவி. நம்முடைய பழங்கால இசைக்கருவியான யாழின் தொடர்ச்சி. இதை கற்றுக் கொள்வதும் கடினமானது. அதோடு அதிலிருந்து வரும் இசை நம்மை பரவசப்படுத்தும். நாங்கள் இருக்கும் பகுதிகளில் அதிகமாக வீணை வாசிக்கவும் மாட்டார்கள்.

அதனாலேயே எனக்கு வீணை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. என்னுடைய பெற்றோர்களும் எனக்கிருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்டு என்னை திருச்சியில் இசை ஆசிரியரான சிவக்குமாரிடம் வீணைக்கான பயிற்சியில் சேர்த்து விட்டாங்க. என் பெற்றோர் எனக்கு கொடுத்த ஊக்கம் மற்றும் ஆர்வம் தான் என்னை வீணையினை சீக்கிரம் கற்றுக் கொள்ள தூண்டியது. நன்கு பயின்றதும். 15 மணி நேரம் வாசித்து கின்னஸ் சாதனையில் இடம் பெற்றேன். அதுமட்டுமில்லாமல் கச்சேரிகளும் செய்து வந்தேன்’’ என்றவர் திரையிசை பாடல்களில் வாசிப்பதில் ஆர்வம் ஏற்படக் காரணம் குறித்து பகிர்ந்தார்.

‘‘நான் திரைப்படப் பாடல்களை வீணையில் வாசிக்க என் கணவரும் ஒரு காரணம். நான் ஆரம்பத்தில் இசை கச்சேரிகள், திருமண நிகழ்வுகளில்தான் வாசித்து வந்தேன். பொதுவாக இது போன்ற நிகழ்ச்சியில் வீணைகளில் கீர்த்தனைகள்தான் வாசிப்பார்கள். ஆனால் இப்போது சினிமா பாடல்களையும் வாசிக்க சொல்லி கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களின் விருப்பத்திற்காக நாங்க சினிமா பாடல்களையும் வாசிப்போம். நாளாக நாளாக சினிமா பாடல்களை இசைத்ததற்காகவே எனக்கு நிறைய நிகழ்ச்சிகள் வரத் தொடங்கியது. தொடர்ந்து சினிமா பாடல்கள் பலவற்றையுமே நான் வீணையில் வாசிக்க தொடங்கினேன்.

நான் சிறு வயதில் இருந்தே வீணை வாசித்து பழகியதால் சினிமா பாடல்களின் மெட்டுகளை கேட்டாலே போதும். அதை அப்படியே வீணையில் வாசித்து விடுவேன். எல்லோராலும் அப்படி வாசிக்க முடியுமா என்றால் அதை முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு இசையமைப்பாளரின் இசையும் வேறுபட்டிருக்கும். குறிப்பாக இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒவ்வொன்றுமே தனித்துவமாக இருக்கும். அவரளவிற்கு ஒவ்வொரு பாடலிலும் ராகம், மெட்டு, இசைக் கருவிகளை பயன்படுத்திய விதம் எல்லாமே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பல கர்நாடக சங்கீதத்தில் இருக்கிறவற்றையெல்லாம் எளிமைப்படுத்தி எல்லா மக்களுக்கும் கொண்டு சென்றவர்.

உதாரணமாக, மாயாமாளவகௌளை என்ற கர்நாடக ராகம் இருக்கிறது. இந்த ராகத்தைதான் புதிதாக இசை கற்போருக்கு சொல்லிக் கொடுப்பார்கள். இந்த ராகம் பாடுவதற்கு கடினமானதும் கூட. நிறைய கீர்த்தனைகள் கொண்ட ராகம் இது. இந்த ராகத்தை கொண்டுதான், ‘பூங்கதவிலே தாழ் திறவாய்…’ என்ற பாடலுக்கு இசை அமைத்து இருப்பார். அதுவரை அந்த ராகத்தை கேட்டவர்கள் இப்படியும் இந்த ராகத்தில் பாடல் ஒன்றை உருவாக்க முடியுமா என்று ஆச்சரியப்பட்டு போனார்கள்.

இப்படி கடினமாக இருக்கும் ராகங்களை கூட எளிமையாக அனைத்து தரப்பு மக்களும் கேட்கும் வண்ணம் புதுமையாக மாற்றிக் காட்டினார். இதே போல ஹம்சத்வனி என்ற ராகத்தையும் தன்னுடைய பாடலில் பயன்படுத்தி வியக்க வைத்துள்ளார். இசை வடிவத்தை பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே இசையை புரிந்து கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி எளிய மக்களும் இசையை புரிந்து கொள்வது மாதிரியும் அதை எல்லோரும் ரசிக்கும் விதமாக மாற்றி அமைத்தவர். என்னை போன்ற புதிய இசைக் கலைஞர்களுக்கு இளையராஜா சார்தான் ஒரு இன்ஸ்பிரேஷன். அவரை போலவே நானும் எல்லோருக்கும் புரிவது மாதிரி வாசிக்க வேண்டும் என நினைத்தேன். முக்கியமாக வீணை இசை எல்லோருக்கும் புரியும் வண்ணமாக இசைக்க விரும்பினேன்.

‘‘எந்த இசை மக்களால் எளிதாக ரசிக்க முடிகிறதோ, அது தான் மக்களின் நினைவில் இருக்கும். நான் இதை உணர்ந்தேன். அதனால் தான் வீணை வாசிப்பதிலேயே புதிதாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் என்ன செய்யலாம் என நினைக்கும் போது தான் சினிமா பாடல்களை நான் வீணையில் வாசிக்க தொடங்கினேன். வீணையில் வாசிப்பது மக்களுக்கு புது விதமாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் இருப்பதால் மக்கள் தொடர்ந்து சினிமா பாடல்களை வாசிக்க சொல்லி கேட்க தொடங்கினார்கள்.

நான் வாசிப்பதை என் சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்தேன். அதை பார்த்தே பலரும் என்னை வாசிக்க அழைத்தனர். நான் தொடர்ந்து சினிமா பாடல்களை வாசித்தாலும் எனக்கென்று தனியாக சில பாடல்கள் வாசிக்கவும் பிடிக்கும். முக்கியமாக இசை அமைப்பாளர் எம்.எஸ்.வி அவர்களின் ‘தென்றல் உறங்கிய போதும்…’ பாடல் வாசிப்பதற்கு இனிமையாக இருக்கும். அதேபோல், ராஜா சாரின் ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…’ பாடலை என்னுடைய எல்லா நிகழ்ச்சியிலும் வாசித்து விடுவேன்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் சொல்ல வேண்டுமென்றால் ‘செளக்கியமா கண்ணே…’ பாடலை குறிப்பிடலாம். இந்த பாடல்கள் எல்லாம் வாசிக்கும் போது எனக்கும் அந்த பாடல் மீதான ஒரு ஈர்ப்பு ஏற்படும். எனக்காக பிடித்த பாடல்கள் மட்டுமல்லாமல் கச்சேரிகளுக்கு செல்லும் போது மக்கள் கேட்கும் பாடல்களையும் வாசிப்பேன். இதிலேயே பல விதமான இசைகளையும் வாசிக்கலாம். சிலர் வீணையில் சில பாடல்களை கேட்கும் போது அந்த பாடலை புதிதாக கேட்பது போலத் தோன்றும். இதனாலேயே பலரும் வீணையில் வாசிப்பதை வரவேற்கின்றனர். என்னை போலவே பலரையும் உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு’’ என்கிறார் ஸ்ரீநிதி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post எளிதாக ரசிக்கப்படும் இசை… என்றும் நீங்காமல் இருக்கும்! appeared first on Dinakaran.

Tags : Srinidhi ,Kungumum Dodhi ,
× RELATED கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..!!