×

அன்பும் கடவுளும் இதைப் புரிந்துகொண்டால் கடவுள் உங்களிடம் வருவார்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து

கடவுள் என்ற வார்த்தைக்குச் சிறப்பான பொருளே அன்புதான். கடந்து உள்ளிருப்பவர் கடவுள். கடந்து உள்ளிருப்பது அன்பு. கடவுளால் ஆகாதது இல்லை. அன்பினாலும் ஆகாதது இல்லை.

கடவுள் எதையும் எதிர்பார்ப்பது இல்லை.அன்பும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை. (எதிர்பார்த்தால் அதற்கு பெயர் அன்பு அல்ல)அறிவிற்கு அப்பாற்பட்டவர் கடவுள்.

எனவேதான் வெறும் அறிவினால் மட்டும் கடவுளை அடைய முடியவில்லை. அன்பும் அறிவிற்கு அப்பாற்பட்டதுதான். சில நேரங்களில் அறிவைத் தள்ளிவிட்டு அன்பு வேலை செய்யும். அறிவினால் மட்டும் கடவுளை அடைய முடியாது என்பதற்கு பல முனிவர்களும், ஞானிகளும் தாங்கள் பெற்ற அறிவினைக் கொண்டு கடவுளை அடைய முடியவில்லை என்று கூறும் இதிகாசப்புராணக் கதைகளை மேற்கோளாகக் கொள்ளலாம்.

கடவுளை அடைவதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்றால், அதற்கு அன்புத்தன்மையை அடைய வேண்டும். அன்புத்தன்மையை பூரணமாக அடைவதே வாழ்க்கையின் குறிக்கோள். கடவுளின் பொருள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அன்பின் உண்மையான பொருளும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

இப்படிப் பல கோணங்களில் சிந்தித்தே “கடவுளை அடை – அன்பை அடை” – அன்புதான் கடவுள் என்ற பொருளில் திருக்குறளின் முதல் அதிகாரத்தை கடவுள் வாழ்த்தாக வைத்தனர் என்று எனக்குத் தோன்றுகிறது.திருவாய்மொழியின் முதல் பாசுரமான “உயர்வற உயர்நலம்” என்கிற பதத்திற்குப் பொருள் அன்புதான் என்று நிச்சயமாகக் கொள்ளலாம். அன்பு என்பது பள்ளம் போல. அதனால்தான் ‘‘அன்பில் விழுந்தேன்’’ என்று சொல்வார்களே தவிர ‘‘அன்பில்ஏறினேன்’’ என்று சொல்ல மாட்டார்கள். பள்ளம் இருக்கும் இடத்தில் மழைநீர் தானாக வந்து சேர்ந்து விடும். அதைப்போல கருணையே வடிவான, மழைநீர் போன்ற இறை வன், அன்பு என்கிற பள்ளம் இருக்கும் இடத்தில் அழைக்காமலே வந்து சேர்ந்து விடுவான்.

இந்த அன்பானது மஹான்களின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும். எம்பார் என்றொரு ஆசாரியார். ராமானுஜரின் சீடர். ஒரு நாள் நந்தவனத்தில் ராமானுஜர் வருகையில், எம்பார் ஒரு பாம்பின் வாயில் கையிட்டு ஏதோ செய்து, பின் பாம்பை அதன் போக்கில் விட்டுவிட்டு தீர்த்தமாடி வந்ததைக் கண்டார். “பாம்பைத் தொடலாமா? ஏன் இப்படி செய்ய வேண்டும்? என்ன காரணம்?” என்று உடையவர் வினவ, எம்பார் சொன்னார். “பாம்பு நாக்கை நீட்டிக்கொண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்தது; அதன் நாவில் முள் இருந்தது; அதை எடுத்துவிட்டு நீராடினேன்”.

அது கேட்டு ராமானுஜர், “என்னே இவரின் பூத தயை!” (மற்ற ப்ராணிகளிடம் கருணை)! என்று உளங்கனிந்தார். இந்த அன்பு மேலெழுந்து நின்றதால்தான் வள்ளலாரை வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாட வைத்தது.

“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்’’.
– என்று பிறர்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துகிறார்.

பொதுவாக இறைவனிடம் சென்று ‘‘எனக்கு அது வேண்டும்; இது வேண்டும்’’ என்று கேட்பதுதான் நமக்கு வழக்கம். ஆனால், வள்ளலார் என்ன கேட்கிறார் தெரியுமா? ‘‘இறைவா நான் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் அந்த வரத்தைத் தர வேண்டும்’’ என்கிறார்.

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும். ஒரு நுட்பத்தை இங்கே சொல்கிறேன். பொதுவாக நாம் பல்வேறு விஷயங்களைக் கற்கிறோம். கற்பது என்றால் அறிவு பெறுவது! எத்தகைய அறிவு? நாம் படிக்கின்றோமே – பல செய்திகளைத் தெரிந்துகொண்டு, ‘‘எனக்கு அது தெரியும். இது தெரியும்’’ என்கிறோமே அந்த அறிவா? இல்லை. இங்கே வள்ளுவர் அறிவின் பயன்பாட்டைச் சொல்கிறார்.

“அறிவினான் ஆகுவதுண்டா?” என்றே ஆரம்பிக்கிறார். அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடைமற்றவரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதாதபோது அறிவினால் என்ன பயன் என்கிறார்.அறிவு அன்பாக மாறும்போதுதான் இந்த வேலையைச் செய்யும்! முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி, மயிலுக்குப் போர்வையைக் கொடுத்தான் பேகன்.

இங்கே முல்லைக்கு ஏதேனும் கொழுகொம்பு, ஒரு குச்சி நட்டு வைத்தால் போதாதா? விலை உயர்ந்த தேரைத் தர வேண்டுமா என்று கேட்கும். எது கேட்கும் என்றால் அறிவு கேட்கும். ஆனால் அன்பு அறிவை விலக்கி விட்டு உடனடியாக வேலை செய்யும். அன்பின் வெளிப்பாடு விசித்திரமானது. அது பல நேரங்களில் அறிவைப் புறந்தள்ளும்.

அவனவன் வயிற்றுவலியும் தலைவலியும் அவனவனுக்குத்தான் தெரியும் – என்பது கிராமத்துப் பழமொழி! அடுத்தவன் வயிற்றுவலியை, தான் உணர முடிந்தால் அது அன்பு! அதனால் நஞ்ஜீயரிடம் ஒருவர் “வைணவன் யார்?” என்று கேள்வி கேட்டபோது அவர் அழுத்தமாகச் சொன்னார்.‘‘பிறர் துன்பம் கண்டு நெஞ்சில் கை வைத்து தன் துன்பம் போல் பதறுபவன் வைணவன்’’ என்றார். இதில் “பிறர்” என்ற வார்த்தை முக்கியம். பிறிதின் நோய் என்ற குறள் நெறி இந்த வார்த்தையில் பிரதி பலிப்பதைக் காணலாம்.

இது பாரபட்சமில்லாத – எதையும் எதிர்பார்க்காத – தன்னைக் கொடுக்கும் குணத்தைக் குறிப்பது. பிற உயிர்களுக்காகத் தன்னை இழப்பது மேகம். எனவேதான் கடவுள் வாழ்த்துக்குப்பின் வான்சிறப்பை வைத்தார். அடுத்த அதிகாரம் நீத்தார் பெருமை. இதிலேகூட அன்பின் சிறப்பைத்தான் விரிவாகவும் முடிவாகவும் பேசினார். அந்த அதிகாரத்தின் கடைசிக் குறள் இது.

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான். (குறள் 30)

மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை என்பது அன்புதானே? அன்பின் கனிதானே அருள். அறவோர் அன்புள்ளோராக இருக்க வேண்டும். சரி, அந்த அறம் எப்படி இருக்க வேண்டும்? என்று அடுத்த அதிகாரத்தில் சொல்கிறார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற
(குறள் 34)

மனத்தூய்மைதான் தலையாய அறம் என்கிறார். மனதில் தூய்மை இல்லாதவர் களால் அன்பு செலுத்தவே முடியாது. காரணம், அழுக்காறு, அவா சேர்ந்து அன்பை சுரக்காமல் செய்து விடும். இதை அடுத்த அதிகாரத்தில் இன்னமும் மேம்படுத்திப் பேசுகிறார். அறத்தாற்றின் இல்வாழ்க்கை என்று, அறவழியில் வாழ்வதே இல்வாழ்க்கை என்று சொல்லி, அதற்கு அடிப்படையாக இருப்பது அன்பு! என்கிறார்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!

அறனும் அன்பும் என்றுகூட எழுதியிருக்கலாம். ஆனால், அன்பில்லா அறத்தால் பயன் இல்லை! ஆனால் அறம் என்கிற செயல் இல்லாவிட்டாலும்கூட அன்பிருப்பின் அதுவே அறமாகிய பயனைத் தரும். எனவே திருக்குறள் முழுமையும் ஆராய்ந்து பார்க்கும்போது, அன்பு நெறியையே அவர் அதிகமாக வலியுறுத்துகிறார்.

‘‘அன்பில் தழைத்திடும் வையம்’’
‘‘அன்புடையார் எல்லாம் உடையார்’’
‘‘அன்பின் வழியது உயிர்நிலை’’
‘‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’’

‘‘அறத்திற்கே அன்பு சார்பு’’
‘‘யாக்கையின் அகத்துறுப்பு அன்பு’’

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் என்பது இக்குறளின் பொருள்.

அன்பு என்றால் என்ன?

ஒரு சின்ன உதாரணம். மகளுக்குப் புற்றுநோய் என்பதால் அவருடைய கூந்தலை மழித்துவிடுகிறார் அவர் தாய். கையோடு மகளுக்கு ஆதரவாக தனது கூந்தலையும் மழித்துக் கொள்கிறார். பழம் பாடலில் தோன்றும் ஒரு காட்சி. அன்பு விலங்குகளிடமும் உண்டு என்பதை காட்டும் காட்சி. காட்டில் மான் இணைகள் வாழ்கின்றன. ஒருமுறை கடும் வறட்சி. அருகில் நீர் நிலைகள் இல்லை. கடைசியில் கொஞ்சம் நீர் இருக்கும் ஒரு இடம் காண்கின்றன. அங்கு சிறிதே நீர் இருக்கிறது. ஒவ்வொருவராகச் சென்று நீர் அருந்தி வரத் திட்டம் போடுகின்றன.

ஆண் மான், நாம் குடித்துவிட்டால் அடுத்து வரும் பெண் மானுக்கு நீர் இல்லாமல் போய்விடுமே என எண்ணி, நீர் பருகியது போல போக்குக் காட்டிவிட்டு, பெண் மானுக்கு வழிவிடுகிறது. பெண் மான் பார்க்கிறது. தனக்கே இந்த நீர் காணாதே, தன் பின் வரும் ஆண்மானுக்கு எப்படிப் போதும் என்று, வாய் வைத்து பருகியது போல பாசாங்கு செய்துவிட்டு, ஆண் மானுக்கு வழி விடுகிறது. இப்படி தங்களுக்குக் கிடைத்த சிறிதளவு நீரையும் ஒன்று மற்றொன்றிற்காக விட்டுக் கொடுப்பதைக் காட்டும் அப்பாடல்:

“சுனை வாய்ச் சிறு நீரை, ‘எய்தாது’ என்று எண்ணி
பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன்.
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்.
உள்ளம் படர்ந்த நெறி.’’ (ஐந்திணை ஐம்பது 38)
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

– என்ற குறளில், என்பும் உரியர் பிறர்க்கு’ என்பதன் குறிப்பு என்ன என்று உணர வேண்டும்.

எலும்பு என்பதன் மரூஉவான ‘என்பு’. சினையாகுபெயராக எலும்போடு கூடிய உடம்பு குறித்தது. ‘என்பும் உரியர் பிறர்க்கு’ என்ற தொடர்க்கு ‘அன்புடையார் தமது உடம்பையும் பிறர்க்கு உரியதாக்குவர்’ என்பது பொருள். தனது எலும்பையோ அல்லது உயிரையோ தருவது என இதை விளக்குவர். என்பும் உரியர் என்று சொல்லப்பட்டதற்கு புராணத்தில் வரும் ததீசியை மேற்கோள் காட்டுவர். தேவர்களுடைய துன்பங்களை நீக்க விருத்தாசூரனை வெல்ல வேண்டும். அதற்கு ஒரு சிறந்த ஆயுதம் வேண்டும்.

அந்த வச்சிராயுதஞ் செய்வதற்காக, இந்திரனுக்குத் தன் முது கெலும்பைக் கொடுத்த முனிவர் ததீசி. அதுபோல, தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்காகத் தன் தசையையும் உடம்பையும் அளித்த சிபியையும் உரையாளர்கள் எடுத்துக் காட்டினர்.

அன்புடையார் அன்பு செய்யப்பட்டார்க்கு உடலையும் தந்து உதவுவதைச் சொல்வது. இன்று மருத்துவ உலகில், குருதியைக் கொடையாக வழங்க முடியும். உடல் உறுப்புகளில் பலவற்றைக் கொடையாக அளிக்க முடியும். கண், சிறுநீரகம், இதயம் போன்ற பல உடல் உறுப்புக்களை அன்புடையார் கொடையாக தாம் வாழும்போதோ அல்லது இறந்த பிறகோ பிறர்க்குக் கொடையாக வழங்குகின்றனர். ‘என்பும் பிறர்க்கு உரியர்’ என்ற தொடர், உறுப்புக்கொடையையும் எண்ண வைக்கிறது. வள்ளுவர் உலகத்திலுள்ள மக்களை இரண்டே பிரிவாகப் பிரிக்கிறார்.

1. அன்பில்லாதவர்கள்.
2. அன்புடையவர்கள்.

சரி. இவர்களை அடையாளம் காண்பது எப்படி என்கிற கேள்வி எழும்!அன்பில்லாதவர்கள் சுயநலக்காரர்கள். தான், தன் குடும்பம், தன் மனைவி, தன் சுகம், தன் பொருள் என்று கருதி உயிர்
கொடுத்து உழைப்பவர்கள். அல்லது உழைத்து உயிர் கொடுப்பவர்கள்! தமக்குரியர் அன்பு என்பதால் இவர்கள் அன்புநெறி கடை பிடிக்காதவர்கள் என்றே திருவள்ளுவர் காட்டுகிறார். (அன்பிலார் எல்லாம் தமக்குரியர்) ஒரு சின்ன அன்பான, படித்த அறிவுள்ள, செல்வச் செழிப்புள்ள குடும்பம். அம்மா, அப்பா மற்றும் அவர்களின் பெண் குழந்தை ஆக மூவர் உள்ள அருமையான குடும்பம். ஊரில் நல்லவர்கள் என்று பேரெடுத்தவர்கள்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவர்கள். இவர்களைச் சோதிக்க மூவர் புறப்பட்டு விட்டனர். அன்பு, அறிவு, செல்வம் என்ற மூவர் அவர்களின் வாசலுக்கு வந்து விட்டனர். வெளியே நின்று குரல் கொடுத்தனர். வெளியே வந்து, ‘‘நீங்கள் யார்’’ என்று கேட்க, இவர்கள் மூவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அந்த விருந்தினர்களை வீட்டுக்குள்ளே வருமாறு அழைத்தனர். அவர்களோ, ‘‘எங்கள் மூவரில் ஒருவர் மட்டுமே உங்கள் வீட்டுக்குள் வந்து, உங்களுடன் வசிக்க முடியும். எங்கள் மூவரில் யார் உங்களுடன் வசிக்க வேண்டுமென்று முடிவு செய்து விரைவாகச் சொல்லுங்கள்’’ என்று அன்பு, அறிவு, செல்வம் மூவரும் சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றனர்.

குடும்பத்தினர் மூவரும் வீட்டுக்குள் சென்று ஆலோசனை செய்தனர். அன்பு, அறிவு, செல்வம் ஆகிய மூன்றும் வேண்டும். ஆனால், இவர்கள் நிபந்தனைப்படி யாரை அழைக்கலாம் என்று குழப்பத்தில் ஆழ்ந்தபோது, கணவர், “அறிவைக் கூப்பிடலாம்”, என்றார். மனைவி, “செல்வத்தைக் கூப்பிடலாம்,” என்றார்.

குழந்தை, ‘‘நான் ஒன்று சொல்லட்டுமா?’’ என்றாள். சரி, சொல் என்றனர்.‘‘நமக்குத்தான் பொன்னும் பொருளும் நல்ல படிப்பறிவும் உள்ளதே! அன்பைக் கூப்பிட்டுக்கொள்ளலாமே’’, என்றாள். குழந்தையின் வேண்டுதலை மறுக்க இயலாமல், அப்படியே ஆகட்டும். ‘‘வா, அன்பை வீட்டுக்குள் அழைத்துக் கொள்வோம்’’ என்று வெளியே சென்று, அன்பை வீட்டுக்குள் வருமாறு அழைத்தனர். அன்பு, மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள்ளே சென்றது. அன்பு சென்றதும் அதைவிட்டுப் போக மனமில்லாமல் அறிவும் செல்வமும் வீட்டுக்குள்ளே சென்று மூன்றும் ஒன்றாக அந்த வீட்டில் வசிக்கத் தொடங்கின.

அன்புள்ளவர்களோ – தங்கள் வாழ்க்கை, பொருள், அறிவு எல்லா வற்றையும் பிறருக்காகச் செலவழிப்பவர்கள். பொதுநலம் கருதும் புண்ணியர்கள். ஆண்டாள், திருப்பாவையிலே, வாமன அவதாரத்தை வெகுவாகப் புகழ்வாள். அந்த அவதாரத்தைச் சொல்லும்போது, உத்தமன் என்ற பதத்தைப் போடுவாள். இதற்கு உரையாசிரியர் விளக்கம் தரும்போது மிக அற்புதமாகத் தருவார். இந்திரனுக்காக – தானே குறளுருவாய்த் தாங்கிச் சென்று – பிச்சை கேட்கவும் தயங்காதவன்.

அதற்காகவே எடுத்த வடிவம் என்பதால் உத்தமன் என்று ஆண்டாள் போற்றினாள்.அன்பே சிவம் என்றார்கள் ஆன்றோர்கள். பிறர்க்குரியதான அன்பைத்தான், திருக்கோட்டியூரில் “தான் மட்டும் நரகம் போனாலும் பரவாயில்லை” என்று ஆசையுடையோர்களை அழைத்து, மந்திரப்பொருளை மறைக்காது சொல்லி, சரித்திரத்தில் இடம் பிடித்தார் ராமானுஜர். எனவே எப்படிப் பார்த்தாலும் ஆன்மிகத்தின் மையப்புள்ளி அன்புதான். இதைத்தான் வள்ளுவமும் வற்புறுத்துகிறது. இந்த அன்பு நெறிதான் இன்றைய தேவை! இந்த அன்பு நெறி காட்டும் மனிதர்கள்தான் இன்றைய தேவை!

தொகுப்பு: பாரதிநாதன்

The post அன்பும் கடவுளும் இதைப் புரிந்துகொண்டால் கடவுள் உங்களிடம் வருவார் appeared first on Dinakaran.

Tags : God ,Kunkum Anmigam Thirukkural ,
× RELATED பூவும் பூசையும்…