×

வாக்குச்சீட்டுகளை அதிகாரி திருத்தி தில்லுமுல்லு செய்தது வெளிப்படையாக தெரிகிறது.. சண்டிகர் தேர்தல் வழக்கில் நீதிபதி காட்டம்

புதுடெல்லி: இந்த வழியில்தான் தேர்தலை நடத்துவீர்களா என்று சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் 20 வாக்குகள் பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளரின் 8 ஓட்டுகள் செல்லாது என அறிவித்த தேர்தல் அதிகாரி, 16 வாக்குகள் பெற்ற பாஜ வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனிடையே வாக்குச்சீட்டில் பேனாவால் கிறுக்கி தேர்தல் அதிகாரி திருத்தம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதில் மோசடி நடந்திருப்பதாகவும், திட்டமிட்டு 8 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக மேயர் தேர்தல் நீதிபதி கண்காணிப்பில் நடத்தக் கோரியும் ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், 3 வாரத்திற்கு பின் விசாரணையை ஒத்தி வைத்தது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மேயர் தேர்தலை நடத்தும் விதம் இது தானா. சண்டிகர் மேயர் தேர்தல் நடந்த விதம் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாகும் செயல். வாக்குச்சீட்டுகளை தேர்தல் அதிகாரி திருத்தி தில்லுமுல்லு செய்தது வெளிப்படையாக தெரிகிறது. ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது.சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்திருப்பதை பார்த்து மிகவும் வேதனைப்படுகிறோம். தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொலிசிட்டர் ஜெனரல் அவர்களே போய் அந்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சொல்லுங்கள் உச்சநீதிமன்றம் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முறையான இடைக்கால உத்தரவை பிறப்பிக்க தவறிவிட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கேமராவைப் பார்த்துக்கொண்டு ஒரு திருடனைப் போல ஏன் செயல்படுகிறார்?. இவ்விவகாரத்தில் எங்களது அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான வீடியோ, வாக்குப் பதிவு உள்ளிட்ட ஆவணங்களை பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.அடுத்த உத்தரவு வரும் வரை சண்டிகர் மாநகராட்சி கூட்டம் நடத்தக் கூடாது,”என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

The post வாக்குச்சீட்டுகளை அதிகாரி திருத்தி தில்லுமுல்லு செய்தது வெளிப்படையாக தெரிகிறது.. சண்டிகர் தேர்தல் வழக்கில் நீதிபதி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Dillumulu ,Katam ,Chandigarh ,New Delhi ,Supreme Court ,Yes ,Atmi ,Judge ,Dinakaran ,
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...