×

முடித்து வைக்கப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை யார் விசாரிப்பது என்பதில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீதான வழக்கை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக தலைமை நீதிபதி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், கடந்த ஆண்டு அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை எனக்கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை தாமாக முன்வந்து வழக்கை பட்டியலிட்டு விசாரித்து வருகிறார். மேலும் தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி உள்ளிட்டோரின் வழக்குகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தொடங்கினார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மேல்முறையீடு

இந்த நிலையில் வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு தடைக்கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச். ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்று தான், தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரித்து வருகிறாரா அல்லது தன்னிச்சையாக விசாரிக்கிறாரா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அதுசார்ந்த விவரங்கள் கூடிய அறிக்கையை வரும் திங்கட்கிழமைக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது.

உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் தரப்பில் மனு

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘தமிழ்நாட்டின் முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு முன் அனுமதி கோரி தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் 21.8.2023 அன்று கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அந்த கடிதத்தை 23.8.2023 அன்று பதிவாளர் அலுவலகம் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தது. அந்த கடிதத்தை 31.8.2023 அன்று தலைமை நீதிபதி பார்த்து விட்டார். அதே நேரத்தில் முன் அனுமதி கடிதத்தை தலைமை நீதிபதி பார்ப்பதற்கு முன்பாகவே தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது வழக்கின் விசாரணையை தொடங்கிவிட்டார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிஷேக் சிங்வி வாதம்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பதிவாளர் பதில் மனுவில் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். அதில்,”தாமாக முன்வந்து வழக்கினை விசாரிப்பதற்கு ஒரு நடைமுறை உள்ளது, அதனை தனி நீதிபதி பின்பற்றவில்லை. தலைமை நீதிபதி கடிதத்தை பார்க்கும் வரை ஏன் தனி நீதிபதியால் காத்திருக்க முடியவில்லை?. நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை என்றால் குறிப்பிட்ட நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவுகளும் செல்லத்தக்கவையாக இருக்காது என்ற விதிமுறைகள் இருக்கிறது. வழக்குகளை ஒதுக்கும் பொறுப்பு தலைமை நீதிபதிக்கே இருக்கிறது. ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை பிறப்பித்து விட்டு, அதன் பின்னர்தான் இதுதொடர்பாக அனுமதி கோரி ஒரு கடிதத்தை தலைமை நீதிபதி பார்த்தார் என்று சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது?,”சிங்வி தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு

இதனை பதிவு செய்து கொண்ட பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”முடித்து வைக்கப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தடை விதிக்கப்படுகிறது. வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என்ற முடிவை ஐகோர்ட் தலைமை நீதிபதி எடுக்க ஆணையிடுகிறோம். வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து ஐகோர்ட் தலைமை நீதிபதி முடிவெடுக்க அனுப்புவதே சிறந்தது.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியே விசாரிக்கலாம் அல்லது வேறு நீதிபதி முன்பு விசாரிக்க பட்டியலிடலாம்,”இவ்வாறு தெரிவித்தனர்.

The post முடித்து வைக்கப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை யார் விசாரிப்பது என்பதில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chief Justice of the High Court ,New Delhi ,K. K. S. S. R. ,Justice ,Ramachandran ,Minister ,Chief Justice of the ,High Court ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம்,...