×

மைவி3 நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்திடம் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை..!!

கோவை: மைவி3 நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்திடம் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. கோவையை தலைமையிடமாக கொண்டு Myv3 Ads என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ-டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இதனிடையே, மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மைவி3 நிறுவனத்தார் மற்றும் நிறுவனம் மீது கடந்த 19ம் தேதி 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் முன் சக்தி ஆனந்த் ஆஜராகியுள்ளார். கடந்த திங்கள்கிழமை நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள 10000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மைவி3 நிறுவன அதிபர் மீது ஆட்சியரிடம் புகார் மனு:

கோவை மைவி3 நிறுவன அதிபர் சக்தி ஆனந்த் மீது 16 பேர், கோவை ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். சக்தி ஆனந்த் ஏற்கனவே நடத்திய வி3 ஆன்லைன் டிவி மூலம் மோசடியில் ஈடுபட்டு தங்களை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post மைவி3 நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்திடம் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore Economic Offenses Division ,Sakthi Anand ,MyV3 ,Coimbatore ,Coimbatore Economic Offenses Police ,Sakthi Anandan ,YouTube ,Shakti Anand ,MyV3 Company ,Dinakaran ,
× RELATED மைவி3 நிறுவன உரிமையாளர் விஜயராகவன்...