×

வேலூரில் ‘நடப்போம்- நலம் பெறுவோம்’ திட்டம் மருத்துவ முகாம்களுடன் 8 கி.மீ. தூரம் நடைபயிற்சி

*கலெக்டர், மேயர், கமிஷனர் பங்கேற்பு

வேலூர் : வேலூரில் ‘நடப்போம்- நலம் பெறுவோம்’ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்களுடன் 8 கி.மீ. தூரம் நடைபயிற்சியில் கலெக்டர், மேயர், கமிஷனர் உள்ளிட்டோர் நேற்று பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. தூரம் நடைபயிற்சி பாதைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கி.மீ. தூரமான 10 ஆயிரம் அடிகள் நடக்கும் நடைபயிற்சி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார். வேலூர் கோட்டையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று மருத்துவ முகாம்களுடன் 8 கிலோ தூரம் நடைபயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நேற்று காலை 7 மணியளவில் வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே மருத்துவ முகாம்களுடன் நடைபயிற்சி தொடங்கியது. நடைபயிற்சியை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பங்கேற்றார்.

இதில், ஆர்டிஓ கவிதா, மேயர் சுஜாதா, கமிஷனர் ஜானகி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மாவட்ட தாய்- சேய் நல அலுவலர் ரேணுகா, மாநகராட்சி நல அலுவலர் கணேஷ், சுகாதார பணிகள் புள்ளியியல் உதவி இயக்குனர் சங்கர், மாவட்ட தொற்றா நோய் அலுவலர் வேணுகோபால், வேலூர் சுகாதார அலுவலர் முருகன், மாவட்ட நலக்கல்வியாளர் தங்கராசன், வேலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், அரசு மருத்துவக் கல்லூரி அரசு செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

காந்தி சிலை அருகில் தொடங்கிய நடைபயிற்சி கோட்டைக்கு வெளியில் ஆரம்பித்து முனீஸ்வரன் கோயில், பெரியார் பூங்கா வெளிப்புற நடைபாதை வழியாக கோட்டைக்குள் வந்தது. தொடர்ந்து மைதானம், காவலர் பயிற்சி பள்ளி, ஜலகண்டேஸ்வார் கோயில் வழியாக மீண்டும் காந்தி சிலை அருகே வந்தனர்.

இதேபோல் 2 முறை நடைபயிற்சி மேற்கொண்டனர். இதன் மூலம் 8 கிலோ மீட்டர் நிறைவு பெற்றது. நடைபயிற்சியின்போது சோர்வு அடையாமல் இருக்க கடலை மிட்டாய், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.தொடர்ந்து வேலூர் காந்தி சிலை, பெரியார் பூங்கா, கோட்டை காவல் பயிற்சி பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில், ரத்த கொதிப்பு, சர்க்கரை அளவு போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது.

The post வேலூரில் ‘நடப்போம்- நலம் பெறுவோம்’ திட்டம் மருத்துவ முகாம்களுடன் 8 கி.மீ. தூரம் நடைபயிற்சி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED 2012ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய...