×

புளியமரம் விவசாயத்தை ஊக்குவிக்க வனத்துறையின் மூலம் இலவச மரக்கன்றுகள்

*வேளாண் துறை அதிகாரிகள் தகவல்

தேவாரம் : தேனி மாவட்டத்தில் தேவாரம், பண்ணைபுரம், கோம்பை, மலையடிவாரங்களை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் அதிகமான ஏக்கர் பரப்பில் புளியம்பழம் விவசாயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக புளியம்பழம் விவசாயம் குறைந்துள்ளது. இங்கு விளையும் புளியம்பழம், பதப்படுத்தப்பட்டு, கொட்டை நீக்கப்பட்டவுடன் அதிக சுவையுடன் காணப்பட்டதால் புளி வியாபாரிகள் அதிக அளவில் தேனி மாவட்டத்திற்கு ஒரு காலத்தில் படையெடுத்தனர்.

குறிப்பாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தரம் இங்கு இருந்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள், தேனி மாவட்டத்தில் புளி வியாபாரிகளை வியாபார ஒப்பந்தம் செய்து வருடத்தின் அனைத்து நாட்களிலும் தங்களுக்கு புளி வேண்டும் என புக்கிங் செய்து புளியை அனுப்பி வந்தனர். குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள புளி வியாபாரிகள், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் சென்றன.

புளி வியாபாரம் செய்வதற்கு என்றே தேனி மாவட்டம் பெயர் பெற்றதாக இருந்தது. ஆனால் இடைக்காலத்தில் புளி விவசாயத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக தேனி மாவட்டம் மாறிவிட்டது ஏற்றுமதிக்கு பெயர் போன தேனி மாவட்ட புளி தற்போது, உள்ளூர் தேவைகளையும், பக்கத்து மாவட்டங்களின் தேவையையும் மட்டுமே சரிசெய்து வருகிறது.

இயற்கையின் சொர்க்க பூமியான தேனி மாவட்ட பகுதிகளில் சமீபகாலமாக வளர்ச்சி என்ற போர்வையில் சாலைகள், கட்டிடங்களுக்காக நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டு வருகின்றன. மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு என அரசும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்டத்தில் சாலையோர மரங்கள் பாதுகாப்பு இன்றி உள்ளன.

தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் தங்களுடைய நிறுவன விளம்பர பதாகைகளை மரங்களில் ஆணி அடித்து தொங்கவிடும் போக்கும் அதிகரித்து வருகின்றது. இதனால் மரங்கள் நாளடைவில் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகளவில் புளியமரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விளம்பரம் செய்பவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலை மற்றும் ஊராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, மரங்களின் உள்ள விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மரங்களில் ஆணி அடித்தால் மரத்தின் சேதத்துக்கு தகுந்தாற்போல ரூ.300 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரி போலீசில் புகார் செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்குபதிவு செய்யவும் சட்டத்தில் இடமிருக்கிறது. கர்நாடகா, கேரளாவில் மரங்களில் ஆணி அடிக்க தடை விதிக்கப்பட்டு ஆணி அடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதை பின்பற்றி திருப்பூர், கோவை மாவட்டங்களில் மரங்கள் மீது ஆணி அடித்தவர்களுக்கு அம்மாவட்ட மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். மரங்களில் தொங்கவிடப்பட்டுள்ள விளம்பர பதாகைகளில் இருக்கும் முகவரிகளை சேகரித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு அபராதம் விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திட்டம் விவசாயிகளை சென்றயடைவில்லை வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘‘புளியமரம் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தற்போது வனத்துறையின் மூலம் இலவசமாக மரக்கன்றுகள் தரப்படுகின்றன. இதனை ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள வேளாண்மை துறை அலுவலகம் மூலமாக விவசாயிகள் வாங்கி தங்களது நிலங்களில் புளிய மரக்கன்றுகளை நடலாம் என தேனி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வனத்துறையின் சார்பில் இடம்பெற்றுள்ள மரக்கன்றுகள் ஸ்டாக் வைப்பு இடங்களில் புளிய மரங்கள் வாங்கிச் செல்லலாம். ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அறிவிக்கப்பட்ட திட்டம் முறையாக விவசாயிகள் இடையே சென்றடையவில்லை. இதனால் புளிய மரக்கன்றுகள் எல்லா இடங்களிலும் தேக்கமடைந்துள்ளன. புளிய மரக்கன்றுகளை நடுவதற்கு உரிய ஆலோசனைகளையும் அதன் தேவைகளையும் விவசாயிகள் புரிந்து கொண்டு அதனை வாங்கி பயனடைய வேண்டும்.’’ என்றனர்.

மரங்களில் ஆணி அடிக்காதீர்கள்

இயற்கை ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘‘முதிர்ந்த மரங்களில் ஆணி அடிப்பதால், மரத்திற்குள் நீரை கடத்தும் சைலம், உணவை கடத்தும் புளோயம் பாதிப்பு அடையும். ஏற்கனவே முதிர்ந்த மரங்களின் நடுவில் உள்ள சைலம் செல்கள் உயிரற்றவையாக மாறிவிடும். வெளிப்புறத்தில் உள்ள சைலம் செல்கள் மட்டுமே நீரை கடத்தும் தன்மையுடையதாக இருக்கும். ஆணி அடிப்பதால், இந்த வெளிப்புற சைலம் பாதிக்கப்படும்.

தாவரம் மற்றும் மரத்தின் மேற்பரப்பை ஆனிகளை அடித்து காயம் ஏற்படுத்தினால், அந்த இடத்தில் ரெசின் குழாய்கள், பிசின் போன்ற திரவத்தை சுரக்கும். தேவையில்லாமல் மரங்களின் சுரப்பியை செயற்கை முறையில் தூண்டும் செயலாக உள்ளது. மேலும் மழை, வெயிலால் ஆணிகள் துருப்பிடிக்கும்போது, அவை தாவர செல்களை பாதிக்கும். மேலும், விளம்பர பலகைகளால் வாகனஓட்டிகளின் கவனமும் சிதறும். மரம் நாளடைவில் இறந்துவிடும். இந்த விழிப்புணர்வு இல்லாமல் இரும்பு ஆணிகள் அடிப்பவர்கள் மரத்தின் இறப்புக்கு காரணமாக உள்ளனர்’’ என்றார்.

The post புளியமரம் விவசாயத்தை ஊக்குவிக்க வனத்துறையின் மூலம் இலவச மரக்கன்றுகள் appeared first on Dinakaran.

Tags : Department ,Theni ,Dewaram ,Farmanpuram ,Gombai ,Dinakaran ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு