×

மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த நெல்லை கால்வாய் கரையோரச்சாலையால் கரையிருப்பு, குறிச்சிகுளம் மக்கள் அவதி

*விரைவில் சீரமைக்க கோரிக்கை

நெல்லை : மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த நெல்லை கால்வாயின் கரையோரச் சாலையால் கடுமையாக அவதிப்படும் கரையிருப்பு, குறிச்சிகுளம் பகுதி மக்கள் விரைவில் சீரமைக்க சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தாமிரபரணியின் பாசன கால்வாய்களில் முக்கியமான கால்வாயாக நெல்லை கால்வாய் திகழ்கிறது. சுத்தமல்லி அணைக்கட்டில் தொடங்கி குன்னத்தூர், டவுன் வழியாக தச்சநல்லூர், அருகன்குளம், குறிச்சிகுளம் வழியாக பாலாமடைக்கு செல்லும் இக்கால்வாய் மூலம் சுமார் 6 ஆயிரத்து 410 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. நெல்லை கால்வாயில் கரையோரங்களில் சில இடங்களில் மரங்கள், சில இடங்களில் சாலை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

தச்சநல்லூர் கரையிருப்பு பகுதிகளில் நெல்லை கால்வாயில் கரையோரங்களில் போடப்பட்டுள்ள சாலையை தினமும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் கரையிருப்பு மற்றும் தாராபுரம் பகுதி மக்கள் அடிக்கடி மூடி திறக்கப்படும் ரயில்வே கேட்டை தாண்டி செல்ல வேண்டி உள்ளது. இதனால், நெல்லை கால்வாயின் கரையோர சாலைகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே கடந்தாண்டு டிசம்பர் 16,17, 18 ஆகிய தேதிகளில் அதி கன மழை தொடர்ந்து கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கும், பாதிப்பும் ஏற்பட்டது. குறிப்பாக தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. முக்கியச் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

இதனால் போக்குவரத்தும் தடைபட்டது. இதேபோல் மழை மற்றும் வெள்ளத்தால் கரையிருப்பு- குறிச்சிக்குளம் பகுதியில் நெல்லை கால்வாய் கரையோரச் சாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையின் ஓரம் அரிக்கப்பட்டு, ராட்சத பள்ளம் உருவானது. ஆனால், இந்த பள்ளம் இன்றுவரை சீரமைக்கப்படாததால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் நெல்லை கால்வாயின் கரையோரச் சாலையில் வாகனங்களில் வருவோர் மெதுவாக மறுபக்கமாக நின்று, நிதானித்து செல்கின்றனர்.

அத்துடன் அக்கரையோரத்து சாலையின் ஒருபக்கம் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளதால் இச்சாலையை முறையாக செப்பனிட்டு தருமாறு அப்பகுதி மக்கள் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனிடையே இச்சாலையில் உருவான ராட்சத பள்ளத்தில் கடந்த வாரம் இருவர் தவறி விழுந்து காயம் அடைந்தனர். இவ்வாறு மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த நெல்லை கால்வாயின் கரையோரச் சாலையால் கடுமையாக அவதிப்படும் கரையிருப்பு, குறிச்சிகுளம் பகுதி மக்கள் விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த நெல்லை கால்வாய் கரையோரச்சாலையால் கரையிருப்பு, குறிச்சிகுளம் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kurichikulam ,Nellai canal ,Thamirabarani ,Dinakaran ,
× RELATED உளவுத்துறை ரிப்போர்ட், ரூ.4 கோடி...