×

வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி

*ஊழியர்கள் மும்முரம்

ஓசூர் : கிருஷ்ணகிரி வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் தாகம் தணிக்க, தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,501 சதுர கி.மீ பரப்பளவுள்ள ஓசூர் வனக்கோட்டத்தில், 1,190 சது கி.மீ காவிரி வடக்கு மற்றும் தெற்கு வன உயிரின சரணாலயங்கள் அமைந்துள்ளன. இதில் யானைகள், சிறுத்தைகள், காட்டெருதுகள், மான்கள், கரடிகள், மயில்கள், எறும்புத் தின்னிகள், அரியவகை விலங்குகளான சாம்பல் நிற அணில்கள், எகிப்திய கழுகுகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. காவிரி வடக்கு, தெற்கு வன உயிரின சரணாலயங்களில், அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன.

ஊடேதுர்க்கம், சானமாவு, நொகனூர், அய்யூர், ஜவளகிரி, பனை, உளிபண்டா, மகாராகடை, வேப்பனஹள்ளி, உடுபுராணி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஹள்ளி பகுதிகளில் ஏராளமான யானைகள் தற்போது முகாமிட்டுள்ளன. ஓசூர் வனக்கோட்டமானது காவிரி, சின்னாறு, தென்பெண்ணையாறு மற்றும் தொட்டஹல்லா ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக அமைந்துள்ளது.

இந்த வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் மட்டுமின்றி, ஆண்டுதோறும் கர்நாடாக வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளில் பிரிந்து முகாமிட்டு, அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று பயிர்களை நாசப்படுத்துகின்றன. வனப்பகுதியில் போதுமான தீவனம், தண்ணீர் கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறும் வனவிலங்குகள், வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்த பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாயிகள் சிலர் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, தோட்டத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கின்றனர்.

இதுபோன்ற மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.தீவனம் மற்றும் தண்ணீரை தேடி, யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க, வனத்துறை நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வனப்பகுதியில் யானைகள் விரும்பி உண்ணும் பயிர்களை வளர்க்கப்பட்டு வருகிறது. அத்துடன் வனப்பகுதியில் ஆங்காங்கே தொட்டிகள் அமைத்து தண்ணீரையும் நிரப்பி வருகிறது.

இதனால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்கப்படுகிறது. இந்நிலையில் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில், தற்போது போதிய மழை இல்லாததால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் வன உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் மற்றும் நீர்த்தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து வனக்காப்பாளர் பார்த்தசாரதி கூறுகையில், ‘ஓசூர் வனப்பகுதியில் தென்பெண்ணையாறு பிரதான ஆறாக உள்ளது. வனப்பகுதிக்குள் சில ஓடைகள், காட்டாறுகள் உள்ளன. இது தவிர 20க்கும் மேற்பட்ட இடங்களில் நீர்நிலைகள் உள்ளன. 5 தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன. தற்போது சானமாவு வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளிலும் தண்ணீர் இல்லை. இதையடுத்து, வனத்துறை சார்பில் அந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதன் மூலம் வனவிலங்குகள், குறிப்பாக யானைகள் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வராமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’ என்றார்.

The post வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri forest ,Krishnagiri district ,Hosur forest reserve ,Kaveri ,Dinakaran ,
× RELATED ஓசூரில் வீடு வாடகைக்கு பார்ப்பது போல...