×

3 மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்காக சாத்தனூர் அணையில் இருந்து 530 கனஅடி தண்ணீர் திறப்பு

*விடுமுறையில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்

தண்டராம்பட்டு : 3 மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்காக சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 530 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொன் விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர் பகுதியில் பெய்த பருவமழையால் அணையின் நீர் மட்டம் 118 அடியாக உயர்ந்தது.

பின்னர், விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திரண்டு விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை ஏற்று திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வலது இடது தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 530 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் நேற்று 113.20 அடியாக குறைந்தது.
இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குடும்பம், நண்பர்களுடன் திரண்டனர்.

அணையில் உள்ள ஆதாம் ஏவாள் பூங்கா, டைனோசர் பார்க், தாஜ்மஹால் பார்க், முதலை பண்ணை, மயில் கூண்டு, ராக்கெட் பார்க், நீச்சல் குளம், கலர் மீன் கண்காட்சி உள்ளிட்ட இடங்களில் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பில் மின்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அவற்றினை சுற்றுலா பயணிகள் வாங்கி சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் அணையில் இடது புற கால்வாயில் இருந்து வரும் நீரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

The post 3 மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்காக சாத்தனூர் அணையில் இருந்து 530 கனஅடி தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chatanur Dam ,Thandarampatu ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...