×

தேயிலை விவசாயிகளுக்கு ஆலோசனை

 

கூடலூர், பிப்.5: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் சிறு குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் தொடர்ந்து விவசாயத்தில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். தேயிலை தூளுக்கு சந்தையில் அதிக விலை கிடைத்தாலும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பது அரிதாகவே உள்ளது. பசுந்தேயிலுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ.20 முதல் 35 வரை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

பசுந்தேயிலைக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவும், தரமான தேயிலை தூள் உற்பத்தி செய்யவும், விவசாயிகள் தரமான பசுந்தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்கவும் தேயிலை வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் கடைபிடிக்க வேண்டிய முறையான வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம் சிறு தேயிலை விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பின் சார்பில் கொளப்பள்ளி மற்றும் பாக்கனா பகுதிகளில் விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது.

தேயிலை வாரிய துணை இயக்குனர் திப்யஜித் ஜோதி தத்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளக்கங்கள் அளித்தார். அப்போது அவர் பேசும்போது: சிறு, குறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு கட்டுப்படியான விலை கிடைக்க சரியான விவசாய வழிமுறைகளை கடைபிடித்து தரமான பசுந்தேயிலையை உற்பத்தி செய்வது அவசியம். தொழிற்சாலைகள் தரமான பசுந்தேயிலையை கொண்டு தேயிலைத்தூள் உற்பத்தி செய்தால் மட்டுமே அதற்கு அதிக விலையை பெற முடியும். இதில் விவசாயிகளின் பங்கு மிக முக்கியமானது.

பசுந்தேயிலை உற்பத்தியில் உள்ள நுணுக்கமான வழிமுறைகள் மற்றும் நவீன விவசாய முறைகளை கையாண்டு செலவை குறைத்து அதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், சிஸ்டா பொதுச்செயலாளர் ஷாஜி சளிவயல், தேயிலை வாரிய விரிவாக்க அலுவலர் வருன்மேனன், உபாசி அலுவலர் சுபையர் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் சன்னி, யாகூப் மற்றும் வில்சன் ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்தில் ஏராளமான சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post தேயிலை விவசாயிகளுக்கு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED கூடலூர் நகராட்சி பகுதியில் சேதம் அடைந்த நடைபாதை