×

நடிகை ஸ்ரீ தேவி மரணம் மூடி மறைக்கப்பட்டதாக கூறி பிரதமரின் போலி கடிதங்களை தயாரித்த பெண் மீது சிபிஐ குற்ற பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: பிரபல நடிகை ஸ்ரீ தேவி கடந்த 2018ல் துபாய் சென்றிருந்தபோது அங்கு உள்ள ஓட்டலில் மரணமடைந்தார். அதே போல் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020ல் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீ தேவி, சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் நடந்த விவாதங்களில் புவனேஸ்வரை சேர்ந்த தீப்தி பின்னிட்டி என்ற புலனாய்வாளர் கலந்து கொண்டார். அப்போது தீப்தி கூறுகையில், ஸ்ரீ தேவியின் மரணம் பற்றி விசாரணை நடத்தினேன். இந்த விவகாரத்தில் இந்தியா, ஐக்கிய அரசு எமிரேட் நாடுகளும் உண்மையை மறைத்து விட்டன என குற்றம் சாட்டினார்.

ஸ்ரீ தேவி மரணம் தொடர்பாக பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உச்சநீதிமன்றம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் அரசின் கடிதங்களை தீப்தி காண்பித்தார். இந்த ஆவணங்கள் போலியானவை என கூறப்படுகிறது. வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தீப்தி, அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் காமத் ஆகியோருக்கு எதிராக கடந்த ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பின்னர் தீப்தியின் வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியாவில் உயர் பதவி வகிக்கும் பிரமுகர்களின் கடிதங்களை போலியாக தயாரித்ததாக தீப்தி, அவரது வழக்கறிஞர் ஆகியோர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்ற பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

 

The post நடிகை ஸ்ரீ தேவி மரணம் மூடி மறைக்கப்பட்டதாக கூறி பிரதமரின் போலி கடிதங்களை தயாரித்த பெண் மீது சிபிஐ குற்ற பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : CBI ,PM ,Sridevi ,New Delhi ,Dubai ,Sushant Singh Rajput ,Mumbai ,Sushant Singh ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...