×

அரசியல் ஆதாயங்களுக்காக சொந்த கலாச்சாரம் பற்றி வெட்கப்பட வைத்தனர்: அசாமில் பிரதமர் மோடி பேச்சு

கவுகாத்தி: ‘சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்களால் நமது வழிபாட்டு தலங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அரசியல் காரணங்களுக்காக சொந்த கலாச்சாரத்தை பற்றி வெட்கப்படும் போக்கை உருவாக்கினர்’ என அசாமில் பிரதமர் மோடி பேசி உள்ளார். அசாமின் கவுகாத்தியில் ரூ.11,600 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: ஆயிரக்கணக்கான ஆண்டுகால சவால்கள் இருந்த போதிலும், நாமும், நமது கலாச்சாரமும் எவ்வளவு உறுதியாக நிற்கின்றன என்பதற்கு புனித யாத்திரை தலங்களும், கோயில்களுமே அடையாளங்களாகும். நமது கலாச்சாரத்தின் வலுவான சின்னமான கோயில்கள் தற்போது இடிபாடுகளாக மாறி விட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு நீண்டகாலம் ஆட்சி செய்தவர்கள் இத்தகைய நம்பிக்கைக்குரிய இடங்களின் மதிப்பையும், முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளவில்லை. அவற்றை புறக்கணித்தனர். அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் நமது சொந்த கலாச்சாரம் மற்றும் கடந்த காலத்தை பற்றி வெட்கப்படும் போக்கை உருவாக்கினர்.

எந்த நாடும் தனது கடந்த காலத்தை மறந்து, அதன் வேர்களை வெட்டுவதன் மூலம் முன்னேற முடியாது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. கடந்த ஓராண்டில் காசிக்கு 8.5 கோடி பேரும், உஜ்ஜயினியில் உள்ள மகாகால் லோக்கிற்கு 5 கோடி பேரும், கேதர்தாமுக்கு 19 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்களும் வருகை தந்துள்ளனர். ராமர் கோயில் திறக்கப்பட்டு 12 நாட்களில் அயோத்தியில் 24 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர். இன்று, தெற்காசியாவிற்கு இணையாக அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடைவதை இளைஞர்கள் பார்க்க விரும்புகிறார்கள். உங்கள் கனவே மோடியின் தீர்மானம். உங்கள் கனவை நிறைவேற்ற மோடி எந்த முயற்சியையும் விட்டு வைக்க மாட்டார். இது மோடியின் உத்தரவாதம். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post அரசியல் ஆதாயங்களுக்காக சொந்த கலாச்சாரம் பற்றி வெட்கப்பட வைத்தனர்: அசாமில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Assam Guwahati ,Modi ,Assam ,Guwahati ,Dinakaran ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...