×

சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஜோகித் தோட்டம் உள்ளிட்ட 2 இடங்களில் 1046 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஜோகித்தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.58.66 கோடியில் 416 புதிய அடுக்குமாடி குடியிருப்பு , வள்ளீஸ்வரன் தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.87.53 கோடியில் 630 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை த.வேலு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை செயலாளர் சமயமூர்த்தி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் பிரபாகர், இணை மேலாண்மை இயக்குனர் விஜய கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய ஜோகித் தோட்டம் திட்டப்பகுதி 1982ம் ஆண்டு 230 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 256 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது.

அப்பழைய குடியிருப்புகளை அகற்றி ரூ.58.66 கோடியில் தூண் மற்றும் 13 தளங்களுடன் 416 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு குடியிருப்புக்கும் தமிழ்நாடு அரசின் மானியத் தொகை ரூ.10.27 லட்சமும், ஒன்றிய அரசின் மானியத் தொகை ரூ.1.50 லட்சமும், மற்றும் பயனாளிகள் பங்கு தொகையாக ஏற்கனவே இத்திட்டப்பகுதியில் இருந்த பயனாளிகளுக்கு ரூ.66 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.5.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் சுமார் 417 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, சிறுவர் பூங்கா, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு , தெரு விளக்குகள் மற்றும் தீயணைப்பு வசதிகள் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வள்ளீஸ்வரன் கோயில் தோட்டம் திட்டப்பகுதி 1970ம் ஆண்டு 270 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 568 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி ரூ.87.53 கோடியில் 410 சதுர அடி கொண்ட வள்ளீஸ்வரன் கோயில் தோட்டம் திட்டப்பகுதியில் 3 கட்டிட தொகுப்புகள் தூண் மற்றும் 9 தளங்களுடன், 1 கட்டிட தொகுப்புகள் தூண் மற்றும் 11 தளங்களுடன் ரூ.87.53 கோடியில் 630 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஜோகித் தோட்டம் உள்ளிட்ட 2 இடங்களில் 1046 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Jogit Garden ,Maylapur ,Chennai ,Tamil Nadu Urban Housing Development Board ,Jokitotam ,Maylappur ,Valliswaran Garden ,Chennai Mailapur ,Dinakaran ,
× RELATED முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11...