×

மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய கல்லூரி மாணவர் மீது போக்சோவில் வழக்கு

விழுப்புரம், பிப். 4: மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது வாலிபர், உளுந்தூர்பேட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த நிலையில், இந்த பள்ளி மாணவியை பின் தொடர்ந்து ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியை விட்டு வெளியே வந்த போது மாணவியின் கையை பிடித்துக் கொண்டு தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, மாணவியை திட்டி, தாக்கியுள்ளார். மேலும் தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய கல்லூரி மாணவர் மீது போக்சோவில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Villupuram.… ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...