×

கடற்கரை கோயில் கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பாதாள சாக்கடையில் இணைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் புராதன சின்னங்களை தொல்லியல் துறை நிர்வாகம் பாதுகாத்து பராமரித்து வருகிறது. இப்புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கடற்கரை கோயில் வளாகத்தில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக 15 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரின் இணைப்பை பாதாள சாக்கடையில் இணைப்பதற்காக தொல்லியல் துறையால் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

கழிவு நீரின் இணைப்பை பாதாள சாக்கடையில் இணைத்தால் பாதாள சாக்கடை முழுவதும் நிரம்பி, வீடுகளில் இருந்து பாதாள சாக்கடைக்குச் செல்லும் கழிவுநீர் மீண்டும் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே பள்ளம் தோண்டி பைப் லைன் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தி, தொல்லியல் துறை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, 7வது வார்டு பொதுமக்கள் 40க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, அங்கு நுழைவாயில் பகுதியில் தரையில் அமர்ந்து பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, பேரூராட்சி அலுவகத்தில் மனு கொடுத்து விட்டு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

The post கடற்கரை கோயில் கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பாதாள சாக்கடையில் இணைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Department of Archaeology ,
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...