×

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவால் பொதுமக்கள் பாதிப்பு: முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை, நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கலால் 3 பேர் மயக்கமடைந்தனர். இதனால் பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலானோர் விவசாயம், துணி நெய்தல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட காரம்பேடு, சித்தூர் நத்தம் பகுதியில் இரும்பு உருக்காலை மற்றும் லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் பழைய டயர்களை அரைக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கும்மிடிப்பூண்டி, சென்னை, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, செங்கல்பட்டு, செங்குன்றம், ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் பழைய டயர்களை கொண்டு வந்து அதனை அரைத்து மூலக்கூறுகளாக தயார் செய்கின்றனர். இதனால் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் அதிக கரும்புகையும், நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல் காற்றில் கலப்பதால் அருகில் உள்ள கிராமப்புற மக்களுக்கு சளி, இருமல், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இது சம்பந்தமாக துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிற்சாலையில் இரண்டாவது பிளான்ட் தொடங்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக செயல்பட்டு வருகிறது. இதனால் அதிகளவு மாசுக்கள் வெளியேறி 3 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தனியார் தொழிற்சாலையை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொழிற்சாலை முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியோசக்தி, பாதிரிவேடு சப்இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது பொதுமக்கள் தொழிற்சாலை அருகே சென்று பாருங்கள் மூச்சு விட கூட முடியவில்லை என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் நிர்வாகத்திடம் பேசி புதிதாக தொடங்கப்பட்ட இரண்டாவது பிளான்டை நிறுத்தி வைத்தனர். மேலும் தொழிற்சாலை மீது மாசு கட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரண்டாவது பிளான்ட் தொடங்கப்பட்டு மூன்று நாட்களாக செயல்பட்டு வருகிறது. இதனால் அதிகளவு மாசுக்கள் வெளியேறி 3 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவால் பொதுமக்கள் பாதிப்பு: முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Ekvarpalayam panchayat ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...