×

பாஜ கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்ட எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி அறிவித்தார்

புதுடெல்லி: ‘பாஜ மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும்’ என அறிவித்த பிரதமர் மோடி, ‘இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம்’ என தெரிவித்தார். கடந்த 1980ம் ஆண்டுகளில் பாஜ கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் எல்.கே.அத்வானி. இவர், அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் ஒன்றியத்தில் பாஜ கூட்டணி ஆட்சி அமையும் அளவுக்கு, 90ம் ஆண்டுகளில் கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை பாஜவின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அக்கட்சியின் நீண்ட கால தலைவராக இருந்த அத்வானி, வயது மூப்பு காரணமாக தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இந்நிலையில், 96 வயதாகும் அத்வானிக்கு நாட்டின் உயரிய கவுரவமான பாரத ரத்னா விருதை அரசு வழங்க இருப்பதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மிகப்பெரிய கவுரவம் குறித்து அத்வானியிடம் பேசி எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். நமது காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல் தலைவர்களில் ஒருவரான அத்வானி, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. அடிமட்ட தொண்டனாக இருந்து துணை பிரதமராக உயர்ந்து தேசத்திற்கு சேவை செய்துள்ளார்.

பொது வாழ்வில் அவரது பல ஆண்டு கால சேவை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை கொண்டது. தேசிய ஒற்றுமை மற்றும் கலாச்சார மறுமலர்ச்சிக்கு அத்வானி இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். அவருடன் பழகுவதற்கும், அவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் கிடைத்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதில், அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் ஜனாதிபதி முர்மு மகிழ்ச்சி அடைவதாக கூறப்பட்டுள்ளது. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பாஜ தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தொலைபேசியில் அத்வானியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். கடந்த மாதம், பீகார் முன்னாள் முதல்வரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்த தலைவருமான மறைந்த கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

The post பாஜ கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்ட எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி அறிவித்தார் appeared first on Dinakaran.

Tags : LK ,BJP ,PM Modi ,New Delhi ,Modi ,Deputy Prime Minister ,LK Advani ,
× RELATED பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ்...