×

அண்ணா நினைவு தினத்தையொட்டி கோயில்களில் சமபந்தி விருந்து

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களில் நடைபெற்ற சமபந்தி அன்னதான விருந்தில் பொதுமக்களுடன் அமைச்சர்கள் அமர்ந்து சாப்பிட்டனர். அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள திருக்கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் உணவருந்தினர். இதன் பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகளையும் வழங்கினர். சென்னை, மயிலாப்பூரில் உள்ள மாதவப்பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அடையாற்றி உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

அதேபோல், மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோயிலில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கே.கே.நகரில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோயிலில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அமைந்தக்கரையில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உணவருந்தினர்.

இது தவிர, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தங்கசாலையில் உள்ள ஏகாம்பரரேசுவரர் கோயிலில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மல்லீஸ்வரர் சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அருணாச்சலேசுவரர் கோயிலில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, வடபழநி முருகன் கோயிலில் அரசு தலைமை கொரடா செழியன் கலந்து கொண்டு பொதுமக்களுடன் உணவருந்தியதோடு, ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகளையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சிகளில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post அண்ணா நினைவு தினத்தையொட்டி கோயில்களில் சமபந்தி விருந்து appeared first on Dinakaran.

Tags : Samabandhi feast ,Anna ,memorial day ,CHENNAI ,Chief Minister ,Samabandhi Annadana ,Hindu Religious Charities Department ,day ,Anna's memorial day ,Dinakaran ,
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்