×

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: திமுக அதிரடி அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று திமுக அதிரடியாக அறிவித்துள்ளது. திமுகவில் நாடாளு மன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என்று 3 குழுக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவில் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி, மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.எழிலரன் எம்எல்ஏ, அயலக அணி செயலாளர் எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என குழு தெரிவித்தது.

இந்த நிலையில் தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் திமுக கருத்துகளை கேட்க உள்ளது.திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்- DMKManifesto2024-க்கான உங்கள் பதிவுகளை வரவேற்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், மாநில சுயாட்சியை உரத்துச் சொல்வதற்குமான தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு எதிர்பார்க்கிறது!. தங்களின் கோரிக்கைகளை அனுப்பி வைத்து, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்களிக்க முடியும். எழுத்துப்பூர்வமாக நீங்கள் சமர்ப்பிக்கலாம்.

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in-இற்கு மின்னஞ்சல்கள் அனுப்புவதன் மூலமாகவோ உங்கள் பரிந்துரைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களின் தேவைகளை புரிந்துகொள்வதில் திமுக தேர்தல் அறிக்கைக் குழு மிகவும் ஆர்வமாக உள்ளது.
தொலைபேசி எண் மூலம் பகிருங்கள்: நீங்கள் நேரடியாக தொலைபேசியில் அழைத்து உங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்காக 08069556900-ல் ஒரு சிறப்பு ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண் தொடர்பு மூலம் திமுக தேர்தல் அறிக்கை குழு உங்கள் பரிந்துரைகளை அறிந்து கொள்ளத் தயாராக உள்ளது.

 

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: திமுக அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,CHENNAI ,National Assembly ,Constituency Allocation Committee ,Election Coordinating Committee ,Election Manifesto Preparation Committee ,Dinakaran ,
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...