×

போதை மாத்திரை விற்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை முகப்பேர் அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கடந்த 2019 ஏப்ரல் 20ம் தேதி தகவல் வந்தது. அதன்பேரில், முகப்பேர் மேற்கு டால்பின் அகாடமிக்கு அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவரிடம் 5 எல்எஸ்டி போதை ஸ்டாம்ப் மற்றும் 23 போதை மாத்திரைகள் இருந்தது தெரிந்தது.

அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருவல்லிக்கேணியை சேர்ந்த சரத் சரவணன் (23) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், இவர், அந்த பகுதியில் போதை மாத்திரை விற்றது தெரியவந்தது. அவர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் சரத் சரவணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post போதை மாத்திரை விற்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Narcotics Control Unit ,Chennai Mukapper ,Mukappher West Dolphin Academy.… ,Dinakaran ,
× RELATED குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி...