×

5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை; கெஜ்ரிவாலுக்கு எதிராக ஈடி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு: வரும் 7ம் தேதி விசாரணை

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 5 முறை சம்மன் அனுப்பியும்விசாரணைக்கு ஆஜராகாததால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடி உள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி இதுவரை ஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியுள்ளது. 5 முறையும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தது. 5 சம்மன் கொடுத்தும் அதற்கு கெஜ்ரிவால் இணங்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளது. இந்த வழக்கு குறித்து வரும் 7ம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேருக்கு தலா ரூ.25 கோடி கொடுத்து வளைத்து, தனது ஆட்சியை கவிழ்க்க பாஜ முயற்சிப்பதாக கெஜ்ரிவால் கடந்த வாரம் டிவிட்டரில் குற்றம்சாட்டி இருந்தார்.

ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டு குறித்து நடவடிக்கை கோரி பாஜ தலைவர்கள் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவிடம் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக கெஜ்ரிவால் வீட்டிற்கு நேற்று வந்த டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார், அவரிடம் நேரில் நோட்டீஸ் தர 5 மணி நேரம் காத்திருந்தனர். பின்னர் கெஜ்ரிவால் வீட்டிலிருந்த அதிகாரிகளிடம் நோட்டீஸ் கொடுத்து விட்டு சென்றனர். இதே போல நேற்று முன்தினம் நோட்டீஸ் தர வந்த போது கெஜ்ரிவால் வீட்டில் யாரும் அதை வாங்காததால் போலீசார் திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன நடக்கும்?: குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபர் 3க்கும் மேற்பட்ட முறை சம்மனை புறக்கணிக்கும் பட்சத்தில் அமலாக்கத்துறை அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கும். குறிப்பிட்ட தேதியில் அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும். இந்த வாரண்டையும் புறக்கணிக்கும் பட்சத்தில் அவரை அமலாக்கத்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும். இதே போல, அமலாக்கத்துறையின் நோட்டீசை பலமுறை புறக்கணித்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post 5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை; கெஜ்ரிவாலுக்கு எதிராக ஈடி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு: வரும் 7ம் தேதி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,ED Delhi Court ,New Delhi ,The Enforcement Directorate ,Delhi ,Chief Minister ,Delhi government ,Deputy Chief Minister ,Sisodia ,
× RELATED கெஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு