×

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியவர் அண்ணா: டிடிவி தினகரன் புகழாரம்

சென்னை: கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியவர் அண்ணா என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் இன்று தமிழக அரசு சார்பிலும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அண்ணாவின் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம் என டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியதோடு, ஆதிக்கமற்ற சமுதாயம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று.

”எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளுக்கேற்ப நம்முடைய எதிரிகளும் துரோகிகளும் நம்மை எவ்வளவு பலவீனமாக்க முயற்சி செய்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்டு அண்ணாவின் கனவுகளை, லட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியவர் அண்ணா: டிடிவி தினகரன் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : DTV ,Dhinakaran ,Anna ,Chennai ,TTV Dhinakaran ,DMK ,chief minister ,Tamil Nadu ,Tamil Nadu government ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...