×

சாம்பாரில் பல்லி விழுந்த விவகாரம் தனியார் பாலிடெக்னிக் சமையல் கூடத்திற்கு சீல்

*உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சேலம் : சேலம் ஏற்காடு மெயின்ரோட்டில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள், அங்குள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்தது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாவட்ட நியமன அலுவலர் கதிரவன், உணவு பாதுகாப்பு அலுவலர் சுருளி ஆகியோர் நேற்று சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி சமையல் கூடத்தை ஆய்வு செய்தனர். அப்போது சமையல் கூட வளாகம் முறையாக மற்றும் சுத்தமாக பராமரிக்காமலும், திறந்த வெளியில் சமையல் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்றாத காரணத்தால், அந்த சமையல் கூடத்திற்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது.

மேலும் ஆய்வின் போது கண்ட குறைகளை நிவர்த்தி செய்யும்படி உத்தரவிட்ட அதிகாரிகள், இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க, உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 32ன் படி நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து உணவு மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளது. நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர், மறுஆய்வு செய்து மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சாம்பாரில் பல்லி விழுந்த விவகாரம் தனியார் பாலிடெக்னிக் சமையல் கூடத்திற்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Sambar ,Safety Department ,Salem ,Salem Yercaud Main Road ,Dinakaran ,
× RELATED ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள்...