×

பழநியில் 14ம் நூற்றாண்டு செப்பேடு கண்டுபிடிப்பு

பழநி : பழநியில் 14ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த திருமஞ்சன பண்டாரம் சண்முகம் பாதுகாத்து வைத்திருந்த செப்பேட்டை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:இச்செப்பேடு ஆயிர வைசியர் சமூகம் தம் குடிகளின் கெதி மோட்சத்திற்காக உருவாக்கப்பட்டது. 3 கிலோ எடையும், 49 செமீ உயரமும், 30 செமீ அகலமும் கொண்டதாக உள்ளது.

இச்செப்பேடு பழநி மலை முருகனுக்கு திருமஞ்சனம், வில்வார்ச்சனை, தினசரி விளா பூஜை செய்ய வேண்டி பழநியில் வசிக்கும் செவ்வந்தி பண்டாரத்திற்கு ஏற்படுத்தி கொடுத்த திருமஞ்சன கட்டளையை விரிவாக கூறுகிறது. இச்செப்பேடு கிபி 14ம் நூற்றாண்டில் (1363) சோப கிருது ஆண்டு தை மாதம் 25ம் தேதி வியாழக்கிழமை தைப்பூச நாளில் பெரியநாயகி அம்மன் சன்னதி முன்பாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது.

பழநி ஸ்தானீகம் சின்னோப நாயக்கர், புலிப்பாணி, பழனிக்கவுண்டன் ஆகியோரை சாட்சியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இச்செப்பேட்டில் 518 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
செப்பேட்டின் முகப்பில் விநாயகர், கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், முருகன்,செவ்வந்தி பண்டாரம், ஆயிர வைசியரின் சின்னமான செக்கு ஆகியவை கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன. தொடர்ந்து முருகனின் புகழ் 5 பாடல்களில் பாடப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.

The post பழநியில் 14ம் நூற்றாண்டு செப்பேடு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Palani ,Narayanamurthy ,Tirumanjana Bandaram Sanmugam ,Palani, Dindigul district ,
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...