×

5வது முறையாக ஆஜராக மறுப்பு அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்தார் கெஜ்ரிவால்

புதுடெல்லி: அமலாக்கத்துறை சம்மனை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் 5வது முறையாக நிராகரித்து விசாரணைக்கு ஆஜராகவில்லை. டெல்லியில் நடந்த புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், துணை முதல்வராக இருந்த சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கில் கடந்த அக்டோபரில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்த முறைகேட்டில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டி விசாரணைக்கு ஆஜராகும்படி 4 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராக மறுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து, நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி 5வது முறையாக அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், நேற்றும் கெஜ்ரிவால் விசாரணைக்கு செல்லவில்லை. அதற்கு மாறாக, சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடுகள் தொடர்பாக டெல்லியில் நேற்று கெஜ்ரிவால் தலைமையில் போராட்டம் நடந்தது.

* கெஜ்ரிவாலுக்கு போலீசார் நோட்டீஸ்
டெல்லி ஆம்ஆத்மி அரசை கவிழ்க்க 7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பா.ஜ தலா ரூ.25 கோடி கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இந்த புகார் தொடர்பாக டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கில் அவருக்கு நோட்டீஸ் வழங்க அவரது வீட்டிற்குச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜ அளித்த புகார் அடிப்படையில் போலீசார் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

The post 5வது முறையாக ஆஜராக மறுப்பு அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்தார் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Enforcement Directorate ,New Delhi ,Delhi ,Chief Minister ,CBI ,Sisodia ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் மேல்முறையீடு...