×

பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு

 

கிருஷ்ணகிரி, பிப்.3: தமிழகம் முழுவதும், 2,222 பட்டதாரி, வட்டார வளமைய ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு அறிவித்தது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, வேலையில்லாமல் உள்ளவர்களுக்கு போட்டித்தேர்வு நடத்தி, ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என அறிவித்தது. ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது போட்டி தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னரே ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, வேலையில்லாத 1,192 பேருக்கு நாளை (4ம்தேதி) 3 மையங்களில் தேர்வு நடக்கிறது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடக்கும் ஆங்கில ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை 435 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

கிருஷ்ணகிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியர்களுக்கு 320 பேரும், தமிழுக்கு 233 பேர் என மொத்தம் 553 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதே போல், கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் இயற்பியல் தேர்வை 55 பேரும், வேதியியல் 57, தாவரவியல் 6, விலங்கியல் 9, வரலாறு 71, புவியியல் 6 பேர் என மொத்தம் 204 பேர் போட்டி தேர்வு எழுதுகின்றனர். அதன்படி, 3 மையங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,192 பேர் இந்த போட்டித்தேர்வினை எழுதுகின்றனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

The post பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Tamil Nadu ,
× RELATED விளையாட்டு விடுதிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்