×

பட்ஜெட்டும்… எதிர்ப்பும்… ‘வணிகர்களுக்கு எதுவுமே இல்லை’

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஈரோட்டில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரமைப்பு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. முதல்கட்டமாக, பெரியார் பிறந்த மண்ணில் இருந்து இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக சென்று வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். தமிழில் பெயர் பலகை வைக்காத பன்னாட்டு நிறுவனங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக வரி குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தோம்.

ஆனால், இது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் குழப்பங்களை சரி செய்வது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. தமிழகத்தில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகள் அகற்றப்படுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக, சுங்கச்சாவடிகளில் ஒன்றிய அரசு வசூல் செய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு வட்டி இல்லாத கடன் போன்ற எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வணிகர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. இன்சூரன்ஸ் பாலிசி போடும் போது இதை பற்றி எல்லாம் விளக்கமாக கூறுவதில்லை. இழப்பீடு கேட்கும் போது மட்டும் விளக்கமளிக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகள், நிலைப்பாடு ஆகியவை குறித்து மே 5ம் தேதி வணிகர் தினத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘மதுரை எய்ம்ஸ் குறித்தும், விவசாயிகள் நலனுக்கும் எந்த அறிவிப்பும் இல்லை’
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நேற்று முதுகுளத்தூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவுடன் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டு அதிமுகவினர் பேசி வருவதை தமிழக மக்கள் விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஒரு சமுதாயத்தினரை ஏமாற்றினார். அதேபோன்று தற்போது நாடாளுமன்ற தேர்தலில், சிறுபான்மையினர் ஆதரவாளராக தன்னை காட்டிக்கொண்டு, அவர்களை ஏமாற்றி வருகிறார். எதிர் வரும் தேர்தலில் அவருக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

கொடநாடு கொலை வழக்கில் போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களின் நிலைப்பாடாக உள்ளது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவதே அமமுகவின் விருப்பம். ஓபிஎஸ் உடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தாலும், அவரது கட்சி வேட்பாளர்களை அவர் தான் அறிவிப்பார். ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும், மதுரை எய்ம்ஸ் குறித்தும், விவசாயிகள் நலன் குறித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.

* பெரு நிறுவன முதலாளிகளுக்கு சாதகம் ‘விவசாயிகளுக்கு ஜீரோ’
தென்னிந்திய கரும்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் போளூர் கே.வி.ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்பித்த ரூ.44 லட்சம் கோடி 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துக்கான நிதி கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரூ.1.27 லட்சம் கோடியாகவே உயர்த்தப்படாமல் உள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு எவ்வித சாதகமான அறிவிப்பும் இல்லை. நதிகள் இணைப்புக்கு எந்தவித நிதியும் ஒதுக்கீடு இல்லை. விவசாயிகளுக்கான கடன் நிவாரணம் ஏதும் இல்லை. விளைபொருள்களை சேமிக்க புதிதாக சேமிப்புக்கிடங்கு கட்டும் திட்டம் ஏதும் இல்லை.

நாட்டில் 80 கோடி விவசாயிகள் வசிக்கும் வேளாண் நாட்டில் 11 கோடிப்பேருக்கு மட்டும் பி.எம்.கிசான் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.6ஆயிரம் உதவித்தொகை உயர்த்தப்படவில்லை. இயற்கை வேளாண்மைக்கு உரிய முக்கியத்துவமும், தேவையான நிதி ஒதுக்கீடும் இல்லை. வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் எதிர்பார்த்த தனி நபர் பயிர்க்காப்பீடு மாற்றம் வரவில்லை. 30 கோடி பேர் காப்பீடு செய்ததில் 4 கோடி பேருக்கு மட்டும் காப்பீடு கிடைத்துள்ளது. 10 ஆண்டுகளில் மொத்த உணவு உற்பத்தி 9.8 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைந்துள்ளது.

இதில் வளர்ச்சியில்லை. பருவகால மாற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை. விவசாயக்கடன் பெற விவசாயிகளுக்கான சிபில் ஸ்கோர் தளர்த்தப்படவில்லை. 50 கோடி பேர் கடன் வாங்கும் தகுதியை இழந்து தவிக்கும் நிலையில் உள்ளனர். 100 நாள் வேலைவாய்ப்புத்திட்ட நாட்கள் விவசாயப்பணிகளுக்கு செய்யும் அறிவிப்பு இல்லை. கிராமப்புற வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் இல்லை. மொத்தத்தில் பெரு நிறுவன முதலாளிகளுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது, ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு அதிருப்தியளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post பட்ஜெட்டும்… எதிர்ப்பும்… ‘வணிகர்களுக்கு எதுவுமே இல்லை’ appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Federation of Merchants Associations ,President ,Wickramaraja ,Erode ,Tamil ,Periyar ,
× RELATED ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் வணிகர்...