×

கூட்டணிக்காக கடையை திறந்து ஐஸ் விற்பது கேவலம் அதிமுகவை எடப்பாடியின் தாத்தா உருவாக்கவில்லை: கொந்தளித்த ஓபிஎஸ்

விழுப்புரம் ‘கட்சியின் சட்டவிதிகளை காலில்போட்டு மிதிக்க அதிமுக இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமியின் தாத்தா உருவாக்கவில்லை. கூட்டணிக்காக கடையை திறந்து ஐஸ் விற்கிறார்கள். அதிமுகவுக்கு கேவலமான நிலை ஏற்பட்டுவிட்டது’ என்று ஓபிஎஸ் பொங்கி எழுந்துள்ளார். விழுப்புரத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது: அதிமுக என்ற இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியை தொண்டர்கள் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் என்ற கட்சி சட்ட விதிகளை அன்றே எம்ஜிஆர் உருவாக்கியுள்ளார். இப்படிதான் ஜெயலலிதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். எம்ஜிஆர் உருவாக்கிய சட்டவிதியை மாற்றி, புதிய விதிகளை உருவாக்கி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்கிறார்.

கட்சியின் சட்டவிதிகளை காலில்போட்டு மிதிக்க அதிமுக இயக்கத்தை எடப்பாடியின் தாத்தாவா உருவாக்கினார். இவர்கள் உருவாக்கிய விதிகளால் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் போன்றோர்தான் பொறுப்புக்கு வர முடியும். சாதாரண தொண்டர்கள் எப்படி உயர்ந்த நிலைக்கு வரமுடியும். நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணிக்கு இன்னும் யாரும் வரவில்லை. கடையை திறந்து வைத்து 2 பெட்டிகளை வைத்து ஐஸ் விற்று கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் போட்டிப் போட்டு கொண்டு அதிமுக கூட்டணி பேச்சுக்கு வருவார்கள். தற்போது அதிமுகவுக்கு கேவலமான நிலை ஏற்பட்டுவிட்டது. அதிமுக தேய்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* விஜய்க்கு வாழ்த்து
கூட்டத்துக்கு பின் ஓபிஎஸ் கூறுகையில், ‘விஜய் சிறந்த திரைப்பட நடிகர். புதிய கட்சியை தொடங்கியுள்ள அவருக்கு எங்களுடைய இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் எதிர்வரும் சவால்களை சமாளித்து தமிழக அரசியலில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

The post கூட்டணிக்காக கடையை திறந்து ஐஸ் விற்பது கேவலம் அதிமுகவை எடப்பாடியின் தாத்தா உருவாக்கவில்லை: கொந்தளித்த ஓபிஎஸ் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,AIADMK ,OPS ,Villupuram ,Edappadi Palanichami ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்