×

இரட்டை ரயில் பாதை அமைக்க ₹100 கோடி ஒதுக்கீடு

 

தர்மபுரி, பிப்.3: தென் மேற்கு ரயில்வேயில் ஓமலூர் முதல் ஓசூர் வரையில் இரட்டை ரயில் பாதை அமைக்க ₹100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, பொது மேலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து தென்மேற்கு ரயில்வே பொது மேலாளர் சஞ்சீவ் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-25 பட்ஜெட்டில், இதுவரை இல்லாத அதிகபட்ச மூலதன ஒதுக்கீடு ₹2.52 லட்சம் கோடியாக இருந்தது. உள்கட்டமைப்பு மேம்பாடு, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் நவீன மயமாக்கல், இணைப்பை மேம்படுத்துதல், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதி ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் அளிக்கப்படுகிறது.

ரயில்வேக்கான சராசரி ஆண்டு பட்ஜெட் செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு, புதிய பாதைக்கு ₹2286 கோடியும், ஏற்கனவே உள்ள ரயில் பாதை இரட்டை பாதையாக்கும் திட்டத்திற்கு ₹1531 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தடையில்லா சிறந்த சேவையை உறுதி செய்வதற்காக, பயணிகள் வசதிகளுக்காக ₹987 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ரயில்வே பாதையை இரட்டைப்பாதையாக்குவதற்காக, பெங்களூரு பையப்பனஹள்ளியில் இருந்து ஓசூர் வரை ₹150 கோடியும், அதே போல் ஓசூர் முதல் ஓமலூர் வரை ₹100.1 கோடியும், தென் மேற்கு ரயில்வேக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post இரட்டை ரயில் பாதை அமைக்க ₹100 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,South Western Railway ,Omalur ,Hosur ,General Manager ,Sanjeev Kishore ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி