×

அப்போலோ புற்றுநோய் மையம் சார்பில் அன்மாஸ்க் கேன்சர் திட்டம்

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதில் இருந்து மீண்டவர்களுக்கு எதிரான சமூக பார்வையை தடுக்க, அன்மாஸ்க் கேன்சர் என்ற திட்டத்தை சென்னை அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையம் தொடங்கியுள்ளது.
தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையம் சார்பில், அன்மாஸ்க் கேன்சர் என்ற திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்போலோ மருத்துவ குழும புற்றுநோயியல் இயக்குநர் ஹர்ஷத் ரெட்டி, புற்றுநோய் மைய மருத்துவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் என பலர் கலந்துகொண்டனர். புற்றுநோய் பற்றிய உண்மையை வெளிக்கொணர்வது, அது தொடர்பான தவறான கண்ணோட்டங்களையும் மக்கள் மனதிலிருந்து அகற்றுவது மற்றும் சமூகத்திற்குள் புற்றுநோயாளிகள் மீதான புரிதலை வளர்ப்பது என்பதே இத்திட்டத்தின் நோக்கம். புற்றுநோயை வென்று உயிர்வாழ்பவர்கள் எதிர்கொள்கிற பாகுபாடு, உதாசீனம் போன்ற நிலையை நேருக்குநேராக எதிர்கொள்ள எடுக்கப்படும் ஒரு நடவடிக்கை. புற்றுநோய் பற்றி புரிந்துகொள்ளவும், அதுகுறித்த தவறான அவப்பெயரை உடைத்தெறியவும் மற்றும் புற்றுநோயாளிகள் மீது புரிந்துணர்வையும், பேணி வளர்க்கவும் இந்த அமர்வு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கும், என தெரிவிக்கப்பட்டது. சமூகத்திற்குள் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறை யதார்த்த திறன்களை பங்கேற்பாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் வழங்கி அவர்களை அதிகாரம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்கான நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த அமர்வு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரு வடிவங்களிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி அப்போலோ கேன்சர் சென்டரின் மருத்துவர்கள் சப்னா நாங்கியா மற்றும் ரம்யா உப்புலுரிரி கூறியதாவது: புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர் வாழும் நபர்களுக்கு எதிரான பாகுபாடும், உதாசீனமும் அவர்களது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தடைகளை உருவாக்குகிறது. மேலும், அவர்களது மனம் மற்றும் உணர்வு ரீதியிலான நலத்தின் மீதும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த முக்கியமான பிரச்னை பற்றி சமூகத்திற்கு எடுத்துக்கூறி உணர்வூட்டுவதற்கான ஒரு முயற்சியாகவும், அணுகுமுறையாகவும் அன்மாஸ்க் கேன்சர் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு உயிர்வாழும் நபர்களுக்கு, சமத்துவத்தையும், நடுநிலையோடு நியாயமாக நடத்தப்படுவதற்கான உரிமையையும் செயல்படுத்தும் ஒரு உலகை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும் என்பதற்கான ஒரு பொறுப்பாக இந்த திட்டம் இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post அப்போலோ புற்றுநோய் மையம் சார்பில் அன்மாஸ்க் கேன்சர் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Apollo Cancer Centre ,CHENNAI ,Apollo Proton Cancer Center ,Thenampettai ,Apollo Proton Cancer ,Apollo Cancer Center ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...