×

போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி, கண்காட்சி வாகனம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிறகு விழிப்புணர்வு பேரணியையும், கண்காட்சி வாகனத்தையும் கலெக்டர் துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடந்த ஜனவரி 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து போக்குவரத்து காவல் துறையினர், வாகன விற்பனையாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர், தன்னார்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணி மற்றும் நான்கு சக்கர வாகன பேரணி தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் (திருவள்ளூர்) சு.மோகன், (பூந்தமல்லி) எம்.ஸ்ரீதரன், (ரெட்ஹில்ஸ்) ஆர்.இளமுருகன், மோட்டார்வாகன ஆய்வாளர்கள் (திருவள்ளூர்) கோ.மோகன், (பூந்தமல்லி) சி.காவேரி, (செங்குன்றம்) எம்.கருப்பையா, (திருத்தணி) எஸ்.ராஜராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். அப்போது அவர் தலைக்கவசம் அணிவது மற்றும் ஷீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு குறித்தும் எடுத்துரைத்தார்.

மேலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பிறகு சாலை பாதுகாப்பு குறித்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். இதனையடுத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் அடங்கிய தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள விளம்பர வாகனத்தில் திரையிடப்படும் சாலை பாதுகாப்பு குறித்த குறும்படத்தினை பார்வையிட்டார்.

இந்த விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் முகப்பிலிருந்து புறப்பட்டு காமராஜர் சிலை வரை சென்றடைந்தது. இப்பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடமாடும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தையும் மற்றும் போக்குவரத்து சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தையும் கலெக்டர் பார்வையிட்டு அனுப்பி வைத்தார். இதில் திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி அனுமந்தன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி, கண்காட்சி வாகனம்: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : road safety ,Transport Department ,Tiruvallur ,Collector ,T.Prabhushankar ,Road Safety Month ,National Road Safety Month ,Tiruvallur District ,Road Safety Awareness Rally ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...