×

தமிழ்நாட்டை மாற்றாந்தாய் போல ஒன்றிய பா.ஜ அரசு நடத்துகிறது: மக்களவையில் டிஆர். பாலு ஆவேசம்

புதுடெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டிஆர் பாலு எம்பி மக்களவையில் பேசியதாவது: தமிழ்நாட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்களின் பாதிப்பைச் சமாளிப்பதற்கான உதவிகள் போன்ற கோரிக்கைகளை பொருட்படுத்தாமல் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் போல நடத்துகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் பலவீனப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது சிறிதும் அக்கறை இல்லை. தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெட்ரோலியப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் சேர்க்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம், மதுரையில் எய்ம்ஸ், மெட்ரோ ரயில் திட்ட இரண்டாவது கட்ட பணிகளுக் உரிய நிதி அனுமதி வழங்க வேண்டும் என்று எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களைக் கோரி வருகிறோம்.

தமிழ்நாட்டில் கனமழையால் ஏற்பட்ட பேரழிவைச் சமாளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.37,000 கோடி உதவி கோரியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியும், கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. தமிழர்கள் மீதும், தமிழர்களின் பெருமை குறித்தும் ஒன்றிய அரசு சிறிதும் கவலைப்படவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால் திட்ட இடத்தில் எதுவும் கட்டப்படவில்லை . மதுரையில் இருந்து 120 கிமீ தொலைவில் உள்ள ராமநாதபுரத்தில், மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சேதுசமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர், காமராஜ் போன்ற தலைவர்களின் கனவு. அந்த இடத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு கூறியும் அந்த திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

 

The post தமிழ்நாட்டை மாற்றாந்தாய் போல ஒன்றிய பா.ஜ அரசு நடத்துகிறது: மக்களவையில் டிஆர். பாலு ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Tamil Nadu ,Lok Sabha ,New Delhi ,President ,DMK ,Parliamentary ,Committee ,DR ,Balu MP ,BJP ,union government ,Balu Avesam ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!