×

ஜார்க்கண்ட் நெருக்கடி தீர்ந்தது புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவி ஏற்பு: 5ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டப்பேரவை தலைவர் சம்பாய் சோரன் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் அரசியலில் நிலவிய நெருக்கடி தீர்ந்தது. ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி வகித்து வந்தார். நில மோசடி மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை கடந்த புதன்கிழமை விசாரணை நடத்தியது. இதையடுத்து ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அவர் கைது செய்யப்பட்டார். புதிய முதல்வராக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரனை ஜே.எம்.எம். மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். சம்பாய் சோரன் 47 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், அவர் பதவி ஏற்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் சம்பாய் சோரனை பதவியேற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து ஜார்க்கண்டின் 12வது முதல்வராக சம்பாய் சோரன் நேற்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் நேற்று பிற்பகல் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சம்பாய் சோரனுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலம்கிர் ஆலம், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் சத்யானந்த் போக்தா ஆகியோர் மாநில அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நாளை மறுதினம் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பாஜவினர் குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்பதால் ஆளும் கூட்டணியை சேர்ந்த 38 எம்எல்ஏக்கள் ஐதராபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள ரிசார்டில் தங்கியுள்ள அவர்கள் ஜார்க்கண்ட் திரும்பி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையே அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ஹேமந்த் சோரன் தொடர்ந்த ரிட் மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், ஹேமந்த் சோரனை 5 நாள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

The post ஜார்க்கண்ட் நெருக்கடி தீர்ந்தது புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவி ஏற்பு: 5ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Sambhai Soren ,Ranchi ,Mukti Morcha ,Legislative Assembly ,President ,Chief Minister ,Governor ,CP Radhakrishnan ,Jharkhand… ,Dinakaran ,
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...