×

அடிக்கடி உடல்நிலை பாதித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: தாம்பரத்தில் சோகம்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன். தனியார் உணவகத்தில் வேன் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரம்யா, சேலையூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இத்தம்பதியின் மகள் சவுமியா (17). அதே பகுதியில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சவுமியாவிற்கு அடிக்கடி உடல்நிலை குறைவு ஏற்பட்டதால், சரியாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சவுமியா பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், பள்ளி நிர்வாகம் சவுமியாவின் பெற்றோரை அழைத்து, மாணவியை கண்டித்துள்ளது. இதனால், சவுமியாவை பெற்றோர் திட்டியதாகவும், அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதால், எங்களால் மருத்துவ செலவு செய்ய முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சவுமியா நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலீசார், சவுமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சவுமியா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதில், ‘இனிமேல் நான் உங்களுக்கு செலவு வைக்கமாட்டேன். எனக்கு செலவு செய்யும் பணத்தில் வீட்டை கட்டி முடிக்கவும்’ என உருக்கமாக எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The post அடிக்கடி உடல்நிலை பாதித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: தாம்பரத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Gajendran ,Anandapuram, Netaji Street ,Ramya ,Selaiyur ,Itthampati ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!